முகப்பு

அதிகார விளக்கம்

1. இறை வணக்கம்

ஒப்பற்ற நல்லியல்புகளைக் கொண்டவர் வழியில் நடத்தல்

ஒளியுரை

குறளிசை

குறள் 1 குறள் 2 குறள் 3 குறள் 4 குறள் 5 குறள் 6 குறள் 7 குறள் 8 குறள் 9 குறள் 10
முகப்பு

குறள் 1

குறள் ௧

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

சீர் பிரிக்கப்பட்ட குறள்

அகர முதல எழுத்துஎல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

பதவுரை

அகரம்-எழுத்துகளுக்கு முதல்
முதல-முதலாகயுடையன
எழுத்து-மொழி குறியீடு
எல்லாம்-அனைத்தும்
ஆதி-முதல்
பகவன்-பகுக்கப்பட்டவன்
முதற்றே-முதலேயுடையது
உலகு-உலகம்

ஆசிரியருரை

மணக்குடவர்

எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

காலிங்கர்

அகரமாகிய எழுத்தின்கண் விரிந்தன ஏனையெழுத்துக்களும், அவற்றானாகிய சொற்களும், மற்றைச் சொற்றொடர்புடைய ஏனைத்துக் கலைகளும் மற்றும் யாவையுமாகிய அது மற்றியா தொருபடி அப்படியே மூலகாரணனாகிய இறைவன்கண்ணே நுண்பூதமும், மற்று அவற்றின்வழி விரிந்த வான் வளி தீ நீர் நிலம் என்கிற ஐம்பெரும் பூதமும், அவற்றின்வழி விரிந்த நடப்பன நிற்பனவாகிய இருவகைப் பல்லுயிர்களும், மற்றும் இவ்வுயிர்கள் வாழ்கின்ற உலகங்களனைத்தும் என்றவாறு

பரிப்பெருமாள்

சொல்லும் பொருளும் என்னும் இரண்டனுள்ளும் சொல்லிற்குக் காரணமாகிய எழுத்தும் சொல்லும் பொருளும் அகரத்தைத் தனக்கு முதலாக உடையவாறு போல, தோன்றுகின்ற எல்லாப் பொருட்கும் காரணமாகிய உலகமும் நீர் தீ வளி ஆகாயமாகி ஒன்றோடொன்றொவ்வாத பெற்றியதாயிருப்பினும் ஆதி பரமேஸ்வரனைத் தமக்கு முதலாக உடையதாகலால் அவனை வழிபடவேண்டும் என்றவாராயிற்று.

பரிமேலழகர்

எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

பரிதியார்

உயிரெழுத்துப் பன்னிரண்டுக்கும் அகரம் முதலெழுத்தாதல் முறைமைபோல, ஆதியான பகவன் முதலாம் உலகத்துக்கு என்றவாறு

தேவநேயப் பாவாணர்

எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது.

இது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமையுருபின்மையால் முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப்பின்றியும் மகரமெய் ஒலிக்கப் பெறுதலால் 'நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களெல்லாம்' என்று உரைக்கப்பட்டது. பெரும்பான்மை பற்றியென்க.

பகவன் என்பது பகுத்துக்காப்பவன் அல்லது எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென் சொல். பகு - பகவு - பகவன். பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) என்று திரியும். ஒ. நோ; புகு - புஜ் (bhuj), உகு - யுஜ்.

பகவன் என்னும் சொல் முதற்காலத்திற் கடவுளையே குறித்தது. ஆயின், பிற்காலத்தார் அதைப் பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் ஆரிய மத முத்திருமேனியர்க்கும் அருகன் புத்தன் என்னும் பிற மதத் தலைவர்க்கும் வழங்கிவிட்டமையால், கடவுளைக் குறிக்க முதல் என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. கடவுள் என்னும் சொல்லும் இங்ஙனமே இழிபடைந்துவிட்டமையால், முதற்கடவுள் என்றும் முழுமுதற்கடவுள் என்றும் அடைகொடுத்துச் சொல்லும் வழக்கை நோக்குக. பகம் (ஆறு) என்னுஞ் சொல்லை மூலமாகக் கொண்டு, பகவன் என்பதற்குச் செல்வம், மறம், புகழ், திரு, ஓதி (ஞானம்), அவாவின்மை என்னும் அறுகுணங்களையுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது.

இறைவன் கடவுள் தேவன் என்னும் பிற சொற்கள் இருக்கவும் பகவன் என்னுஞ் சொல்லை யாண்டது, அகரம் என்னும் சொற்கு எதுகையாயிருத்தல் நோக்கியே.

ஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச்சொல். இதன் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் காண்க.

ஆதிபகவன் என்னுந் தொடர்ச்சொல் தமிழியல்பிற் கேற்ப ஆதிப்பகவன் என்று வலிமிக்கும் இருக்கலாம்.

ஏகாரம் தேற்றம்; ஆதலால் இன்றியமையாததே. இவ்வேகாரத்தை ஈற்றசையாகக் கொண்டு,

"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்."

என்னும் இடைக்காடர் பாராட்டு எங்ஙனம் பொருந்தும் என்று புலவர் ஒருவர் வினவ, அதற்கு இராமலிங்க அடிகள் "முதல் தே" எனப் பிரித்தாற் குற்றமென்ன? என்று எதிர் வினவியதாகச் சொல்லப்படுகின்றது. ஏகாரம் ஈற்றசையுமன்று; அடிகள் விடை மிகைப்படக்கூறலாகவும் உவமச் சொல்லிய (வாக்கிய) அமைப்பொடு ஒவ்வாததாகவும் இருத்தலாற் பொருந்துவது மன்று. அகரம் எல்லா எழுத்துக்கட்கும் முதலாகவும், ஏனையுயிரெழுத்துக்களோடு நுண்ணிதாகக் கலந்தும், எல்லா மெய்யெழுத்துக்களையும் இயக்கியும், நிற்றல் போல்; இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராகியும் உயிரற்ற பொருள்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன் என்னும் உண்மை, இம்முதற்குறளால் உணர்த்தப் பெற்றது.

உலகம் பலவாதலின், உலகு என்பதைப் பால்பகா அஃறிணைப் பெயராகவும் முதற்று என்பதை வகுப்பொருமைக் குறிப்புவினை முற்றாகவுங் கொள்ளின், உவமத்தின் பன்மை பொருளிற்கும் ஏற்கும்.

அருவிலிருந்து உருவாக ஆபவனே ஆதி என்னும் இறைவன்.அவனே ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் ஆதலினால் பகவன் எனப்படுவான்.அருவான இறைநிலையிலிருந்து உருவாகத் தானே ஆதலையுடையவன் ஆதி எனவும் அமையும் ஆதியானவனே பலவாகப் பகுபடும் நிலையில் பகவன் எனப்படுவான். எனவே, ஆதியும் பகவனுமான இறைவனிடத்திலிருந்து உலகங்கள் தோன்றுவன எனலே பொருத்தம்.(மொ.அ.துரை அரங்கனார்-'அன்பு நெறியே தமிழர் நெறி, பக்கம் 205,206)

மேற்கண்ட விளக்கம் பொருந்துவதே என்பர் பெரும்புலவர் பேராசிரியர் முனைவர் இரா.சாரங்கபாணி (திருக்குறள் உரைவேற்றுமை - பக்கம்5 - அண்ணாமலைப் பதிப்பு 1989).

'ஆதல்' என்ற தொழி்ற்பெயரடியாகப் பிறந்ததே ஆதி என்ற தமிழ்ச்சொல். செய்தல் - செய்தி; உய்தல்-உய்தி. தோற்றுவிப்பாரின்றித் தானே தோன்றிய இறைவனைத் 'தான் தோன்றி' (சுயம்பு) என்பர்.ஆதி-ஆதன்-ஆதப்பன் என்ற பெயர்கள் செட்டிநாட்டில் பெருவழக்கில் உள்ளன.

ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை, எனவும், முதல்வன், முதலி, முன்னவன், மூலவன் எனவும் பொருள்படும் தமிழ்ச் சொல்லே. இச்சொல் 543-ஆம் குறளிலும் ஆளப்பட்டிருத்தல் காண்க.அகராதி (Dictionary) என்பதும் தமிழ்ச்சொல்லே.

பகவன் என்பதற்கு,மொ.அ.து.உரைத்தாங்கு ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் என்றோ, தொடக்கத்தில் ஒன்றாக நின்று, காலப்போக்கில் (பல் சமயமாகிப்) பல பெயரில் பகுபட்டவன் என்றோ கொள்ளலாம்

மு.வரததாசனார்

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

நாமக்கல் கவிஞர்

எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாக இருப்பதுபோல உலகத்திலுள்ள எல்லாவற்றிற்கும் இறைவன் முதலாக இருக்கிறான். உலகத்தைக்கொண்டு அதை உண்டாக்கினவரை எண்ண வேண்டும்.

திருக்குறளார் வீ.முனிசாமி

உலகில் வழங்கிவரும் எழுத்துக்கள் எல்லாம் ஒலி வடிவான 'அகர' மாகிய முதலை உடையன; அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது.

பேரறிஞர் வ.சுப.மாணிக்கனார்

அகர ஒலி எல்லா எழுத்துக்கும் முதலாகும்; ஆதிபகவன் உலகுக்கெல்லாம் முதலாவான்.

புலவர் இரா. இளங்குமரனார்

எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்னும் எழுத்தையே முதலாக உடையன. அதுபோல, உலகம் முதற்பகவனையே (வாழ்வியலுக்குப் பகுத்து வழங்கியவனையே) முதலாக உடையது.

கலைஞர் மு.கருணாநிதி

அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

சாலமன் பாப்பையா

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

முனைவர் கோ. பெரியண்ணன்

எல்லா எழுத்துகளும் 'அ' என்னும் எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல இவ்வுலகம் ஆதி பகவனை முதலாகக் கொண்டுள்ளது.

முனைவர் சிங்காரவேலு சச்சிதானந்தம்

எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதல் எழுத்தாக உடையன; உலகம் ஆதிபகவனை முதற்பொருளாக உடையது.

ப. வீரராகவன்

உலகுக்கு முதன்மையானவர் யார்?
உலகிற்கு முதன்மையானவர் ஆதிபகவன் ஆகிய கடவுள்

வேதாத்திரி மகரிசி

இக்குறள் மூலம் உயிருக்கும், உலகுக்கும் மூலமான இருப்பாற்றல் நிலை - மெய்ப்பொருள் நிலை - விளக்கப் பெற்றிருக்கிறது. இருந்த, எழுந்த, படர்ந்த மூன்று நிலைகளுக்கும் இருந்த நிலையேதான் மூலம். அந்த நிலையை முதலாகக் கொண்டே எழுந்தவையே உயிரும் உலகும் எனக் கூறியுள்ளார். எந்த மொழியானாலும் "அ" என்ற எழுத்தை முதலாகக் கொண்டே மற்ற எழுத்துக்கள் எல்லாம் அமைந்திருப்பன போன்று ஆதியாகிய தெய்வ நிலையை முதலாகக் கொண்டே உலகும் இருக்கிறது என்ற குறிப்புக் காட்டுகிறார்.

பகு என்ற சொல் மதிப்பு மிக்க பெரிய கருத்துக்களை விளக்கும். பகு, அவன் என்ற இரு சொற் கூட்டுதன் பகவன் என வந்திருக்கிறது. தமிழில் ஈண்டு என்ற சொல், இங்கே என்றோ அல்லது குறுகிய ஒரு எல்லைக் குறிப்பையோ காட்டுகின்றது. ஆண்டு என்ற சொல் விரிந்த பெரிய அல்லது எல்லையற்ற என்ற கருத்தை விளக்குகின்றது. ஆண்டு + அவன் என்ற இரு சொற் கூட்டு ஆண்டவன் என்ற சொல்லாட்சிக்கு வந்துள்ளது போன்றே பகு+அவன் என்ற இருசொற்கூட்டு பகவன் என்று சொல்லாட்சிக்கு வந்துள்ளது. ஆதியென்ற சொல் முதன்மை நிலையை விளக்குவதாகும். இருப்பாற்றலாகிய மெய்ப்பொருள் எல்லாத் தோற்றங்கட்கும் இயக்கங்கட்கும் மூல நிலையாக இருப்பதால், அதனைச் சிறப்பு மொழியால் மூலமான எல்லையற்ற ஒன்றாக விளக்க "பகவன்" என்று மொழிந்துள்ளார். ஆகவே ஆற்றலும், ஆற்றல் செறிவு நிலைகளுமாக உள்ள உலகம் மெய்ப்பொருளாகிய இருப்பாற்றலின் மலர்ச்சியே என்று அறுதியிட்டுக் கூறுகின்றார்.

பரமாய சக்தியுட் பஞ்சமா பூதம் தரம் மாறித் தோன்றும் பிறப்பு

என்னும் ஒளவைக் குறளையும் நினைவிற் கொள்ளலாம். படைப்பு என்கிற கற்பனையிலிருந்து(theory of creation) மனிதனின் பரிணாம விளக்கத்திற்குக் (Theory of evaluation) கொண்டு வரும் பெருங்கருணை இந்த குறளில் விளங்கக் காண்கிறோம். பரம் என்ற இருப்பாற்றலிலிருந்து ஐந்து பூதங்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றாகத் தரம் மாறித் தோற்றம் பெற்றன என்பது பரிணாம உண்மையை விளக்குவதாகும்.

முதல் குறளில் இருப்பாற்றலாகிய தெய்வ நிலையை விளக்கிவிட்டார். வாழ்வைப்பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள், உணர்ந்து நிற்க வேண்டிய இடத்தை நினைவு படுத்திவிட்டார்.

உத்தம புத்திரர்

முதற் குறளாகிய இந்தக் குறள் கடவுள் வாழ்த்து என்ற தலைப்பின் கீழ் வள்ளுவர் எழுதியிருந்தும் அனைத்து உரையாசிரியர்களும், "கடவுளைப் போற்றவே எழுத்துக்கள் உண்டாக்கப்பட்டுள்ளன" என்பதை ஏனோ, எழுத்துகளெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு முதலாக உடையன; அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது எனும் விளக்கத்தையே தருகின்றனர். பெரும்பாலும் அனைவரும் பரிமேலழகர் உரையினை அடியொற்றியதாகவே கருதுகின்றேன். (1)

ஆனால் வள்ளுவரின் இக்குறளில் அவ்வகையானத் தொடர்பற்ற தன்மையில் இருவரிகளும் இருப்பதையோ அல்லது இரு கருத்துக்களையும் ஒப்புமை செய்வதையோ என்னால் பார்க்க இயலவில்லை.

இருப்பினும் தெய்வம் உலகத்திற்கு முதற்றேபோலும் அகரம் எழுத்துக்களுக்கு எல்லாம் தலை என்றும் கொள்வதிலும் தவறும் இல்லை தான். ஆயின் கடவுள் வாழ்த்து என்றுச் சொல்லிய பிறகு, தெய்வத்தைத் தொழாதே எழுத்துக்களில் அகரத்தின் முதன்மையைச் சொல்லவேண்டிய அவசியம் யாது?

எனவே அகர முதல உள்ள எழுத்துக்கள் எல்லாம், ஆதி பகவன் எனும்படியான மூலமுதல்வனாகிய கடவுளை முதன்மைப் படுத்தி அவரை அறியும் அல்லது வணங்கும் அல்லது வாழ்த்தும் பொருட்டே உலகில் உள்ளன அல்லது உலகில் உண்டாக்கப்பட்டன எனப் பொருள் கொள்ளலாம்.

அகர முதலிய எழுத்துக்கள் அனைத்தும் இறைவன் பால் படைக்கப்பட்டன என்பதே சரியான பொருள்.

சைவ நெறியே முதல் நெறியாக இருத்தலின் அக்கருத்துக்களை திருக்குறளில் ஒப்பீடு செய்து காட்ட முயற்சித்துள்ளேன். எனவே அவ்விதம் நோக்குங்கால், அகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகவனாகிய அரனை முதற்கண் கொண்டே உலகாயத்தம் ஆகியது என்று உறுதியுடன் சொல்லலாம்.

மேலும் இது அகரத்தைத் துவங்கும் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் என்பதும் உட்பொருள். இதன் மூலம் இறைவனிற்கு இன்ன மொழிதான் உகந்தது எனும் வாதத்திற்கும் பதில் தந்திருக்கின்றார் வள்ளுவர்.

எழுத்துக்களும், மொழிகளும் மனிதனால் படைக்கப்பட்டவையே. அவை அனைத்துமே இறைவனை, மூலத்தை, ஞானத்தை அறியவே ஏற்படுத்தப்பட்டன. எனவே அவற்றுள் பேதம் கொள்வதும், தேவ மொழிகள் என்பதும், இன்ன மொழிதான் இறைவனிற்கு உகந்தது என்பதும் தவறு. மனிதனால் துவங்கப்பட்ட அனைத்து மொழிகளும் இறைவனிற்கு உகந்தவையே.

உலக மொழிகள் அனைத்தும் பெரும்பாலும் அகரத்திலேயே துவங்குகின்றன. அவை மனிதனின் முதல் ஒலியாகவும், அன்னையைக் குறிப்பதாகவும் கொள்கிறார்கள். தமிழில் அது அன்னையையும், அப்பனையும், அரனையும், அம்மையையும், ஓம் காரத்தின் (அஉம் ) முதல் ஒலியாகவும் முதல் எழுத்தாகவும் விளங்குகின்றது. உலக மொழிகளின் முதல் எழுத்து அகரமாயினும், ஒவ்வொரு மொழியின் இறுதி எழுத்தும் வேறுபடுகின்றன. எனவேதான் வள்ளுவர் அகரம் முதல் தொடங்கி னகரவரையிலுமான எழுத்துக்கள் அனைத்தையும் என்று சொல்லாது அகரமுதல எழுத்தெல்லாம் என்று அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்படி முதல் குறளை அமைத்துள்ளார். வள்ளுவரின் இத்தகைய நுட்பம் மிகவும் போற்றுதற்குரியது. மேலும் வள்ளுவர் முதல் குறளை தமது தாய்மொழியின் முதல் எழுத்தான அகரத்தில் துவங்கி, கடைசிக் குறளின் கடைசி எழுத்தைத் தமிழின் கடைசி எழுத்தான 'ன்' னில் முடியுமாறு அமைத்துள்ளமையால் இத்தகையவாறு மொழி எண் கணிதத்தை இலக்கியத்தில் அமைத்த வகையிலும் முன்னோடியாக விளங்குகின்றார்.

மனிதன் இயற்கையுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தே, எதையெல்லாம் வெல்ல இயாலாததோ, விளங்காததோ அவற்றை எல்லாம் இறை என்று கொண்டான். அவ்வாறே அத்தகைய இறையை அறிதலே மனிதனின் முதல் அறிவுத்தேடலாகவும் இருந்தது. எனவே மொழியின் கண்டுபிடிப்பும், கல்வியின் நோக்கமும், அறிவின் தேடலும் அனைத்தும் இறைவனை நோக்கியே இருந்தன. தனது கண்டுபிடிப்புக்களைப் பதிவு செய்து பின் வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்லவே எழுத்துக்கள் தோன்றின.

மனிதனால் சமைக்கப்பட்டவை இறைவனுக்குப் படைக்கப்படுவது வழக்கம்தானே. எனவே மனிதனின் அத்தகைய கண்டுபிடிப்பை, மொழியை அதாவது எழுத்துக்களை முதற்கண் மூலப்பொருளாகிய இறைவனுக்கே முதற் குறளில் அர்பணித்துத் தம் பணியைத் துவக்குகின்றார் வள்ளுவர். மூல முதல்வனைத் தொழுது, அவர்க்கு மொழியையே படையலாக்கி, எழுத்துக்களை அர்பணித்துத் தொடக்குதலும், தொடருதலும் மிகவும் சரியான முறைதானே.

கணிஞன்

இப்பாடலில் கடவுள் இயல்பும் கடவுளுக்கு உலகோடுடைய தொடர்பும் விளக்கப்படுகின்றன. முதல் குறள் என்பதால் இப்பாடல் பலராலும் மிக நுணுக்கமாக ஆராயப்பட்டுள்ளது.

எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாக இருப்பதுபோல உலகத்துக்கு ஆதிபகவன் முதல் என்பது இக்குறள் கூறும் கருத்து. ஆதிபகவன் யார்? இப்பாடலிலுள்ள உவமை பொருத்தம்தானா?

'அகரம்' நெடுங்கணக்கின் மற்ற எழுத்துக்களுக்கு அடிப்படையானது, காரணமானது, முதற்பொருளானது, முதன்மையானது என்பர். எழுத்துக்கள் அகரத்தை முதலில் வைத்துத் தொடங்குகின்றன. எழுத்தெல்லாம் என்றது உலக மொழிகள் எல்லாவற்றினது எழுத்துக்களீலும் என்று பொருள்படும். உலக மொழிகளில் பெரும்பான்மை 'அ' என்ற ஒலியுடன் தொடங்குவதாக உள்ளன என்று மொழியியல் வல்லுநர்கள் கூறுவர். மாறுபட்ட பண்பாடுடைய பல்வேறு நாட்டு மக்கள் பேசும் வெவ்வேறு மொழிகள் அகர ஒலியை முதலாகக் கொண்டுள்ளன என்பது வியக்கத்தக்க உண்மை. இதை வள்ளுவர் உவமப் பொருளாக்கினார்.

இப்பாவில் கூறப்பட்டுள்ள ஆதிபகவன் யார்? இக்குறளில் உள்ள 'ஆதிபகவன்' என்றது தத்தம் சமயம் சார்ந்த கடவுளைக் குறிப்பது என்று அனைத்துச் சமயத்தாரும் உரிமை கொண்டாடுகின்றனர். ஆனால் இததொடர் 'மூலகாரணன்' என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது; திருவள்ளுவர் எந்தச் சமயத்தையும் மனதில் கொண்டு குறளைப் படைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவு. ஆகவே ஆதிபகவன் என்று குறித்தது இப்பூமியில் பிறந்து வாழ்ந்த எந்த ஒரு சமயத்தையும் சார்ந்த மனிதரையோ அல்லது அச்சமயத்தார் நம்பும் கடவுளரையோ அல்ல. கடவுளுக்குரிய பல பெயர்களுள் ஆதிபகவன் என்பதும் ஒன்று ஆகும். திருவள்ளுவர் தம் அன்னை ஆதியையும் தந்தை பகவனையும் மனதில் கருதியே ஆதிபகவன் முதற்றே உலகெனக் கூறினார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. ஆதி, பகவன் என்பது வள்ளுவரது பெற்றோரின் பெயர்கள் என நிறுவுவதற்கு எந்தவகையான ஆதாரங்களும் இல்லை. உலகப் பொதுமறை கூறவந்த வள்ளுவர் அவருடைய தாய்தந்தையரை உலகுக்கு முதல் என்று தன் நூலில் கூறியிருப்பாரா என்று சொல்லி அறிஞர்களும் ஆய்வாளர்களும் அக்கருத்தை ஒதுக்கித் தள்ளினர். தனக்கோர் மூலம் இன்றி எல்லா உலகும் தோன்றி நின்று இயங்குவதற்குத் தானே மூலமாய் நிற்றலால் இறைவன் ஆதி எனப்படுகிறான். பகவன் என்னும் சொல்லிற்கு நேரடிப் பொருள் கடவுள் என்பதாகும். இந்த உலகின் தொடக்கத்துக்குக் கடவுள் காரணம். அந்த முதன்மையைக் காட்டும் நோக்கில் ஆதிபகவன் என்ற பெயரால் இங்கு கடவுளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

'முதற்று' என்பதும் முதல் என்பதை அடிப்படையாகக் கொண்டுவந்த சொல்லாகும். இதற்கு 'அடிப்படையானது', 'முதலானது' எனப் பொருள் கொள்ளலாம். இங்கு முதல் என்பதன் பொருள் என்ன? நாட்டிற்கு மன்னன் தலைவன் போல தலைமையா? அல்லது குடத்துக்கு மண்போல மூலகாரணமா? அன்றி குயவன் குடம் செய்தல் போலப் படைத்தலா? மணக்குடவரும் பரிதியாரும் எவ்வித விளக்கமும் இன்றி 'முதல்' என்று கூறினர். காலிங்கர், 'உலகமும் உலகிலுள்ள பொருள்களும் கடவுளினின்றே தோன்றின' என்ற பொருளில் 'இறைவன் கண்ணே விரிந்தன' எனக் கருத்துரைத்தார். பரிமேலழகர் தலைமை என்றே கொண்டார். தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் 'இறைவன் தனித்தும் இயங்குகிறான்; எல்லா உயிர்களின் உள்ளே நின்று அவற்றையும் இயக்குகிறான். அதனால் அவன் உயிர் எழுத்தான அகரத்தைப் போன்றவன். அகரம் எல்லா எழுத்துக்களிலும் கலந்து இயக்கியும் தானும் தனித்து இயங்குகிறது. ஆதிபகவனும் எல்லாப் பொருள்களிலும் இரண்டறக் கலந்து இயக்கியும் தனித்தும் இயங்குகிறது. அகரம் இயங்கவில்லையானால் அனைத்து எழுத்துக்களும் இயங்கமுடியாது. அகரத்தால் மெய்கள் ஒலித்து வருகின்றன. அகரத்தோடு பொருந்தியே மெய்கள் இயங்கும். 'அ'கரம் எழுத்துக்களிலெல்லாம் கலந்து இருப்பது போல் இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான்' என்று முதற்குறளில் கடவுளுக்கும் உலகத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கினார். இங்கு முதன்மை தனித்து நிற்கும் ஆற்றலையும் எல்லாமாகி நிற்பதனையும் யாவற்றையும் இயக்குவதையும் குறிக்கும். குடத்தை ஆக்கும் குயவனைப் போலக் கடவுள் உலகத்து வேறாக நிற்பவரல்லர் என்பதும் பெறப்படும். பரிமேலழகர் உரையில் கண்டபடி இப்பாட்டால் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.

உலகு என்பது உயிர்ப் பொருள், உயிரில்லாத பொருள் என இருவகைப்படும்; இப்பாடலில் கூறப்பட்டது உயிர்ப்பொருளே; அதுவே கடவுளை உணர்ந்து அறியத்தக்கது என்பர் சிலர். இவ்விருவகை உலகும் கடவுள் உண்டாக்கியவை. எனவே இக்குறள் குறிப்பது உயிருள்ளதும், உயிரில்லாததுமான இருவகைப்பட்ட உலகமேயாகும். "திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும்போதே உலகமும் உடன் தோன்றுகிறது" என்பார் திரு வி க. வள்ளுவர் உலகுக்கென்றே குறள் படைத்தார். உலகு என்ற சொல்லை வள்ளுவர் முதற் குறளில் பெய்துள்ளமை எண்ணி மகிழத்தக்கது.

இக்குறளிலுள்ள உவமை பொருத்தம்தானா? ‘அ’ என்று சொல்லக்கூடிய எழுத்து ஆரம்ப முதல் எழுத்து. ‘ஆதி பகவன்’ என்பது கடவுள். அகர என்பது எழுத்துக்களுக்கு முதல். ஆதி பகவன் என்பது உலகுக்கும் உயிர்களுக்கும் முதல். இதுதான் இக்குறளில் சொல்லப்பட்டுள்ள உவமை. அகரம் தனித்தும் அகர ஒலியா யெழுந்தும் மெய் எழுத்துக்களை இயக்கி வருவது போல ஆதிபகவனும் தனித்தும் உலகெலாமாகியும் அவைகளை இயக்கியும் வருகிறான். இது இக்குறள் உவமைக்கான பொதுவான விளக்கவுரை. இவ்வாறாக மொழி-அகரம், உலகம்-கடவுள் என்ற உவமை விளக்கப்பட்டாலும் அதன் பொருத்தம் துலங்கவில்லை என்று கூறி அது குறித்து சில ஐயவினாக்கள் எழுப்பப்படுகின்றன: உவமை சொல்லப்பட்டதே முதலில் கேள்விக்கு உரியதாகிறது. இதே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவரே இறைப் பண்பாக 'கடவுள் தனக்குவமை இல்லாதவன்' என்று கூறியிருக்கிறார். தனக்கு உவமை இல்லாதவன் கடவுள் என்ற கருத்தைச் சொல்ல வருபவர் அப்படிப்பட்ட கடவுளுக்கு “அ” எழுத்தை உவமை சொல்லி, முதல் குறளை எப்படி அமைத்தார்? 'அ' என்பது 'இ', 'உ' போன்ற மற்ற குற்றெழுத்துக்களைப் போன்றதுதானே? 'இ'யைவிட 'அ' முதலில் வருவது என்பது தவிர வேறு எந்தவிதத்தில் சிறப்பானது? வேறுபட்டது? மேலும் எழுத்துக்களின் முதல் எழுத்துத் தான் ‘அ’ எழுத்தே தவிர, மற்ற எழுத்துக்களின் தோற்றத்திற்கோ ஒலிஅமைப்புக்கோ ‘அ’ எழுத்து அடிப்படையானதன்று. ‘உ’ என்ற எழுத்துக்கு ‘அ’ எழுத்து எப்படி அடிப்படையாக அமைய முடியும். ‘உ’ எழுத்தில் ‘அ’ எழுத்து எங்ஙனம் நுண்ணியதாகக் கலந்திருக்க முடியும்? ‘அ’ என்பதும் உயிர் எழுத்து; ‘உ’ என்பதும் உயிர் எழுத்து; இரண்டும் தனித்து நிற்கவல்லன; அதன் காரணம் பற்றியே அவை உயிர் எழுத்து எனப்பெயர் பெற்றன. ஒர் உயிர் இன்னொரு உயிருடன் கலவாது. உயிர் மெய்யுடன் மட்டும்தானே கலக்கும்? ஒவ்வொரு உயிரும் மெய்யெழுத்துடன் சேர்ந்து உயிர் மெய்யெழுத்தை உருவாக்கும். அப்படியிருக்க ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கொள்வது எப்படிச் சரியாகும்? ‘இ’ என்ற எழுத்தை எப்படி உச்சரித்தாலும் ‘அ’ ஒலி நுண்ணியதாய்க் கலப்பதை, கலந்திருப்பதை அறிய முடியவில்லையே. க்+அ=க என்று சொல்லும்பொழுது ‘க’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளது வெளிப்படும். ஆனால், ‘இ’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளதை எவ்வாறு புலப்படுத்த இயலும்? அல்லது எவ்வாறு புரிந்துக் கொள்ள இயலும்? இவை ஆய்வாளர்கள் சிலர் எழுப்பும் வினாக்கள். இப்பாவிற்கு 'எடுத்துக்காட்டு உவமை' இலக்கண அமைதி உண்டென்றாலும், உவமை உருபுகளான 'போல்', 'போல', 'அற்று' என்பன இல்லாத குறளில், முதலடியும் ஈற்றடியும் தொடர்பற்ற தன்மையில் இருப்பதாகத் தோன்றுகின்றது. முதற்குறளின் சொற்பொருள்கள் புரிந்து கொள்ளப்படுகின்றன. ஆனால் அகரம், கடவுள் என்ற இரு கருத்துக்களையும் ஒப்புமை செய்வதை முழுதாக உணர இயலவில்லை. எங்கும் எல்லாப் பண்புகளிலும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனுக்கு உவமை சொல்ல, ஒலி போல் நிறைந்துள்ளான் என்று ஒரு பண்பு மட்டுமே கொண்டு சொன்ன மொழி-அகரம், உலகம்-கடவுள் என்பதை நிறைவான உவமையாக ஏற்க முடியவில்லை.

இச்செய்யுள்ளில் கூறப்பட்டுள்ள உவமை அவ்வளவு சிறப்பாக இல்லை என்றால் அதற்கு அமைதி உண்டா? க

ாலமெல்லாம் நிலைத்து நிற்கக்கூடிய நூலைப் படைக்க வேண்டும் என்ற பெருநோக்குடன் குறள் எழுதத் தொடங்கிய காலை வள்ளுவர் நினவிற்கு வந்தவர்கள் அவரது பெற்றோரும் தொல்காப்பியரும் ஆவர் என்பதாகத் தெரிகிறது. அடுத்து, உலகு என்ற நினவும் இயல்பாக அவர்க்குத் தோன்றியது. பெற்றோர், ஆசிரியர், உலகு- மூன்றையும் முதற் குறளில் ஒருசேரக் கூற முனைந்திருக்கலாம். ஆனாலும் வள்ளுவர் நேரடியாக பெற்றோர்- தொல்காப்பியர் பெயரை தம் நூலில் குறிப்பிட விரும்பமாட்டார். வித்தகக் கவிஞரான அவர் தன் கவிதை ஆற்றலைக் காட்டி மூன்றையும் முதற்குறளில் குறிப்பால் அமைக்கிறார்.

தொல்காப்பிய இலக்கண வரையறைகளைக் கொண்டே குறள் யாக்கப்பட்டது என்பர். தொல்காப்பியத்தின் நேரடியான தாக்கம் குறளில் இருப்பதை எளிதில் உணரலாம். தொல்காப்பியர் தமிழ் மொழிக்குச் செய்த வரலாற்றுச் சாதனை வள்ளுவரை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும். இவரையே வள்ளுவர் வழிகாட்டியாகக் கொண்டார் என்பதற்கும் சான்றுகள் பல உள்ளன. தொல்காப்பியரது முதல் வரியையே தன் நூலின் முதல்வரியாக அமைத்து 'அகர முதல எழுத்தெல்லாம்' என்று தன் நூலைத் தொடங்குகிறார்; 'கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே' எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்ட கடவுள் வாழ்த்து என்னும் சொற்றொடர் திருக்குறளின் முதல் அதிகாரத்திற்குத் தலைப்பாகவும் அமைந்தது. எனவே நூல் தொடக்கத்தில் தொல்காப்பியர் நினைவு வந்திருந்தால் அது புரிந்துகொள்ளக்கூடியதே

அடுத்துத் தாய்தந்தையர் பெயரையும் முதற்குறளில் இணைக்கிறார். இப்படிச் செய்ததால் வள்ளுவர் தன் வரலாறு கூறினார் என்றோ அவருடைய தாய் தந்தையரை உலகிற்கெல்லாம் முதன்மையானவரெனக் கூற வருகிறார் என்றோ பொருளில்லை. பெற்றொர்களின் நினைவின் எதிரொலியாக ஆதிபகவன் என்ற சொற்றொடர் அமையப் பெற்றது என்பதாகத்தான் கொள்ள வேண்டும். ஆதிபகவன் என்ற வடமொழித் தொகைச் சொல், சங்க கால இலக்கியங்களில் காணப்படாத, புது வழக்காகும். தீந்தமிழ் நூல் செய்த வள்ளுவர் முதற்பாவிலேயே வலிந்து ஆதிபகவன் என்ற ஒரு வட சொல்லை ஏன் திணித்தார்? இதற்கு விளக்கமாகச் சொல்லப்படும் 'ஆதி, பகவன் என்று அவரது தாய்-தந்தையரையே மறைபொருளாகக் குறிப்பிட்டார்' என்ற கருத்தை நம்பமுடியாத கற்பனை என்று தள்ளிவிட முடியாது. பெற்றோர் பெயர்களையும் சொல்லியாகிவிட்டது; அதே நேரத்தில் மூலகாரணன் ஆகிய இறைவன் என்று பொருள்பட உரைத்ததும் ஆயிற்று. ஆதிபகவன் என்ற சொற்றொடர் முதற்குறளில் இடம் பெற்றதற்கு இது அமைதி ஆகலாம்.

தொல்காப்பியம், தாய்தந்தையர், உலகமக்களுக்கான நூல் என்ற நினைவில் நூலைத் தொடங்குகிறார். அதன் பாதிப்பே அளவைக் குறைவுபட்ட முதற்குறளின் உவமை.

கடவுள் இந்த உலகத்தையும் உலக உயிர்களையும் இயக்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது என்றாலும் அக்கடவுள் விளக்கப்பட இயலாதவர். கடவுள் உண்மையை விளக்குவதற்குப் பல உவமைகள் காணப்பட்டாலும் அவை எவையுமே கடவுளை முழுமையாக அளக்க முடியாது. எனவேதான் வள்ளுவரே பின்வரும் குறள் ஒன்றில் தனக்குவமை இல்லாதவன் என்று இறைவனைப் போற்றுவார். காலிங்கர் உரையில் கண்டபடி 'உலகமும் உலகிலுள்ள பொருள்களும் 'இறைவன் கண்ணே விரிந்தன' என்பதே முதற்குறளில் வள்ளுவர் சொல்ல வந்த கருத்தாகும். இறைவனை முதலாகக் கொண்டே இவ்வுலகம் இயங்குகிறது என்று கூறுவதால், இப்பாடல் இறைவன் ஒருவன் உளன் என்பதைத் தெளிவாக்கும். அந்த எல்லையில்லா மெய்ப்பொருளின் முதன்மையும் குறள் முதல் செய்யுள்ளால் அளக்கப் பெறுகிறது.

மொழிப்பெயர்ப்பு

Transliteration

Akara mutala eluttellam ati
pakavan mutatre ulaku.

English

All the alphabets have the letter A as the first alphabet;
the world has the primeval God as the first and foremost entity

French

Toutes les lettres ont pour principe ‘A’ ;
l’univers a pour principe l’Etre Primitif.

German

Das „A“ ist der erste aller Buchstaben – Gott ist der Erste von allem in der Welt.

Russian

Как буква “а” есть первая среди всех букв, так все сущее в этом мире ведет свое начало от Адибхагавана — Изначально Сущего.

Latin

Literae omues principium habent literam A: Mundus principium habet numen primordiale.

Arabic

كما أن "أ" فى كل لغة هي أول الحرف الأبجديـة فكذلك المبدء اللأول هو أول الكائنات فى العالم

Malay

Semua huruf adalah mempunyai huruf A sebagai huruf pertama;
alam adalah mempunyai Tuhan purbakala sebagai perwujudan pertama sekali

Sanskrit

अकारादेव निर्यान्ति समस्तान्यक्षराणि च । चराचरप्रपञ्चोऽय मीश्वरादेव जायते ॥

Hindi

अक्षर सबके आदि में, है अकार का स्थान ।
अखिल लोक का आदि तो, रहा आदि भगवान ॥

Telugu

అచ్చుమూలమైన దక్షరంబుల కెల్ల వేద వేద్యు డాది విశ్వమునకు

Malayalam

കാരത്തില്‍ത്തുടങ്ങുന്നു അക്ഷരാവലി; യെന്നപോല്‍ പ്രപഞ്ചോല്‍പ്പത്തിയാരം‍ഭം‍ ഭഗവല്‍ശക്തിതന്നെയാം.

Kannada

ಅಕ್ಷರಗಳಿಗೆಲ್ಲಾ ಅಕಾರವೇ ಮೊದಲು, ಲೋಕಕ್ಕೆಲ್ಲಾ ಮೊದಲು ಆದಿ ಭಗವನ್

ஒளியுரை

குறளிசை

1. இறை வணக்கம் குறள் 2
முகப்பு

குறள் 2

குறள் ௨

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

சீர் பிரிக்கப்பட்ட குறள்

கற்றுஅதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

பதவுரை

கற்று-கல்வி
அதனால்-பெற்றதனால்
ஆய-உண்டான
பயன்-நன்மை
என்-யாது
கொல்-அசைநிலை
வால்-தூய
அறிவன்-இறைவன்
நல்-நல்ல
தாள்-அடி
தொழா-வணங்கப்பட
அர்-மாட்டார்
எனின்-என்றால்

ஆசிரியருரை

மணக்குடவர்

மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின்.

சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.

காலிங்கர்

பலவகைப்பட்ட கலைகளையும் கற்றதனால் உள்ள பயன் யாது கொல்லோ? மாசற்ற அறிஞனாகிய இறைவனது தூய அடியினை வணங்காராயின்.

பரிமேலழகர்

கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.

பரிதியார்

சாத்திரம் கற்றும் அதனால் ஆகிய பயன் என்ன? மேலறிவாளனான சிவன் ஷ்ரிபாதத்தை வணங்காராகில் என்றவாறு.

தேவநேயப் பாவாணர்

வால் அறிவன் நல்தாள் தொழார் எனின் - தூய அறிவையுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழாதவராயின்; கற்றதனால் ஆய பயன் என் - நூல்களைக் கற்றவர்க்கு அக்கல்வியால் உண்டான பயன் யாதாம்?

அஃறிணை யிருபாற் பொதுவான எவன் என்னும் வினாப்பெயர் 'என்' என்று தொக்கு இங்கு இன்மை குறித்தது. கொல் என்பது அசைநிலை. தூய அறிவாவது இயற்கையாகவும் முழுநிறைவாகவும் ஐயந்திரிபற்றும் இருப்பது. தமிழக மருந்துகள் பெரும்பாலும் தழையுந் தண்டு மாயிருத்தலின், பிறவிப்பிணிக்கு மருந்தாகும் குறிப்புப்பட இறைவன் திருவடிகளை நற்றாள் என்றார். 'தொழாஅர்' இசை நிறையளபெடை.

கல்வியின் சிறந்த பயன் கடவுளை வழிபட்டுப் பேரின்ப வீடு பெறுவதென்பதே பண்டையறிஞர் கொள்கை.

"ஆண்டவனுக்கு அஞ்சுவதே அறிவின் தொடக்கம்". என்றார் சாலொமோன் ஓதியார் (ஞானியார்.)

"எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்."

என்பது பழஞ் செய்யுள். "கற்பக் கழிமடம் அஃகும் மடமஃகப் புற்கந்தீர்ந் திவ்வுலகிற் கோளுணரும் - கோளுணர்ந்தால் தத்துவ மான நெறிபடரும் அந்நெறியே இப்பால் உலகத் திசைநிறீஇ யுப்பால் உயர்ந்த வுலகம் புகும்."

என்பது நாண்மணிக்கடிகை. (27) கடவுளை வணங்காவிடின் கல்வியாற் பயனில்லை என்பது இக்குறட் கருத்து.

மு.வரததாசனார்

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

நாமக்கல் கவிஞர்

படிப்பதன் பயன் அறிவு பெறுதல். அப்படியானால் நம் அறிவுக்கெல்லாம் எட்டாத ஒரு பொருள் இருப்பதை உணர்ந்து அதைப் போற்றாவிட்டால் படிப்பினால் என்ன பயன்?

திருக்குறளார் வீ.முனிசாமி

எல்லா நூல்களையும் கற்றவனுக்கு அக்கல்வி அறிவால் உண்டான பயன் என்னவென்றால், தூய அறிவினன்-மெய்யுணர்வினன்-ஆகிய இறைவனுடைய நல்ல அடிகளைத் தொழுதல் ஆகும்.

பேரறிஞர் வ.சுப.மாணிக்கனார்

கற்றதன் பயனென்ன? தூய அறிஞனது நல்ல திருவடியை வணங்கா விட்டால்.

புலவர் இரா. இளங்குமரனார்

தூய அறிவின் வடிவானவனின் நல்ல அடிகளை வணங்குவதைக் கல்லாதவர், கற்ற பிற கல்வியால் எப்பயனும் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

சாலமன் பாப்பையா

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.

முனைவர் கோ. பெரியண்ணன்

கல்வி கற்றதன் பயன், தூய அறிவினனாகிய இறைவனின் திருவடிகளைத் தொழுதலே ஆகும்.

முனைவர் சிங்காரவேலு சச்சிதானந்தம்

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனின் திருவடிகளை ஒருவர் தோழாதவராயின், அவர் கற்ற கல்வியால் உண்டான பயன் யாதாம்?

ப. வீரராகவன்

யாருக்குக் கற்ற கல்வியால் பயன் இல்லாமல் போகும்?
கடவுளை வணங்க்காதவனுக்குக் கற்ற கல்வியால் பயன் இல்லை

வேதாத்திரி மகரிசி

இரண்டாம் குறள் உயிர் விளக்கம் தருகிறது. இது வெளிப்படையாக விளக்கிக் காட்ட முடியாத நிலை. உயிரானது உடலில் புலன்கள் மூலமாகப் படர்ந்து இயங்கும்போது உணர்ச்சிகளாக - புற மனமாக இருக்கிறது. படர்க்கை சுருங்கி தன்னிலையில் அடங்கியபோது அறிவாக - உள் மனமாக இருக்கிறது. அதுவே தன் விரவை முழுமையாக நிறுத்திக்கொண்டு அமைதி பெறும் நிலையில் தெய்வமாக இருக்கிறது. இந்நிலைகளை முறையான அகநோக்குப் பயிற்ச்சிகளின் மூலமே உணர முடியும். பிறர் விளக்கக் கேட்டோ, புத்தகப் படிப்பின் மூலமோ, கற்பதால் முழுப்பயன் கிட்டா. மாறாக அறிவில் முழுமை பெற்று சீவன் நிலை மெய்யுணர்வால் சிவநிலையாதலேயாகும். இது யோகத்தின் அல்லது அகத்தவத்தின் முடிவான நிலையாகும். சீவன் அறிவின் முழுமையால் சிவ நிலையுணர்ந்து, அச்சிறந்த நிலையின் பெரும் பேற்றில் திளைத்தால் அல்லாது வெளிப்புறக் கல்வியால் மட்டிலும் பயனில்லையென்று விளக்கும் ஆழ்ந்த ஒரு மறைபொருள் விளக்கமே உயிர் விளக்கம் ஆகும்.

முதல் குறளில் தெய்வ நிலையை விளக்கிவிட்டார். அடுத்த குறளில் சீவனுக்கும் தெய்வத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கி மிக நுண்மையாக உயிர் நிலையை அதன் சிறப்பாற்றலை அறிவினைக் கொண்டே விளங்கிக் கொள்ளுமாறு குறிப்பு காட்டிவிட்டார். சீவனின் சிறப்பே அறிவு.; சீவனின் மூலமே மெய்ப்பொருள் அறிவைக்கொண்டு உயிரையும் உயிரின் மூலமான மெய் நிலையையும் புத்தகப்படிப்பால் உணர முடியாது. அறிவின் களமான உயிரையும் முடிவான மெய் நிலையையும் அந்நிலையுணர்ந்த ஆசான் மூலம் அகநோக்குப் பயிற்ச்சி பெற்று அறிவைக்கொண்டே உணர்ந்து இணைந்து பயன் பெற வேண்டும் என்பதே இக்குறளின் குறிப்பு.

உத்தம புத்திரர்

ஒவ்வொரு மொழியிலும் அகர முதலாகத் தொடரும் எழுத்துக்கள் யாவும் தெய்வத்தின் பால் ஏற்படுத்தப் பட்டன என்றார் சென்ற குறளில்.

இப்போது இரண்டாவது குறளில், கல்வி என்பதே மெய்யறிவாகிய தெய்வத்தை அறிய முற்படுவதே என்கிறார்.

ஒருவர் கல்வி கற்றும் இறைவனின் திருவடிகளைத் தொழவில்லை எனில், அவரது கல்வியினால் பயன் இல்லை, அவர் என்னதான் கற்றார் என்பது பொருள். எனவே மெய்யறிவான இறைமையை, மெய்ஞானத்தை அறிய முற்பட்டுத் தெளிவதே கல்வியின் குறிக்கோளாகவும், கல்வியின் முழுமையாகவும் இருக்க முடியும்.

இறைவனின் திருவடிகளை வணங்குதல், தொழுதல் என்பது அந்த மெய்யறிவிடம் சரண் அடைதல் என்பது பொருள். மேதகு அறிஞனான இறையைத் தொழுதுதானே மெய்யறிவைப் பெறமுடியும். முதல் படிப்பு பணிவு என்பதும் உட் பொருள்.

வாலறிவன் என்பதற்கு யோக மார்க்கத்தில் மூலாதாரத்தின் வாலைக் குமரி எனும் இறையைக் குறிக்கும் சொல்லோடு பொருந்துவதையும், ஆக மூலத்தை உணர்ந்து ஈண்டு பெற்ற, அனைத்தையும் அறிந்த இறையோன் என்றும் பொருந்துவதையும் உணர்ந்து கருதுவது நன்று.

கடவுளின் வாழ்த்தை வெறும் போற்றி வழிபாடாகச் செய்யாமல் தனது நூலில் கடவுளைப் போற்றுவதற்கான காரணங்களை வகுப்பதே வள்ளுவரின் மிகப் பெரிய சிறப்பு.

தனது தெய்வம் பற்றிய தெளிந்த நல் அறிவை, கடவுள் வாழ்த்தின் மூலமாகவே தெய்வத்திற்கும், படிப்போருக்கும் எளிதாக உணர வைக்கிறார். தெய்வத்தை உணருவதே, அறிவதே, சேருவதே, போற்றிப் பயன் பெறுவதே மனிதனின் நோக்கமாக இருக்க வேண்டுமென்பது அவரது துணிபு.

காழ்ப்பில்லாமல் சொல்ல வேண்டுமானால் நான் தான் கடவுள், என்னை வணங்குவோருக்கு நன்மை கிட்டும் என்பது போன்று சொல்லாமல், நான் இறைவனின் தூதுவன், நான் பார்த்த இறைவன் இப்படி என்னிடம் சொல்லச் சொன்னார் என்றும் சொல்லாமல், இறைவனால் எனக்கு இறக்கி வைக்கப்பட்டது என்றும் சொல்லாமல், இதுவரையில் எந்த மதத்தின் சாயலும் இல்லாமல் தனது தெளிந்த கோட்பாட்டை மனிதனுக்கு மனிதனாகவே வலியுறுத்துகிறார்.

சமயம் என்பது தமிழில் மதத்திற்கான சரியான வார்த்தை. அதாவது இறைக் கொள்கை. சமயம் என்பது ஒரு குறிப்பிட்ட வழிபடு தெய்வத்தைப் பற்றியும், அதனைத் தொழ வேண்டிய முறை பற்றியும், தொழுவோர் செய்யத் தக்கன, செய்யத் தகாதன, தொழுதால் பெறும் பயன்பற்றியும் கூறுவதாகும். தத்துவம் என்பது சமயத்தின் உட்பிரிவு. அது சமயத்தில் குறிக்கப்படும் இறைவனுக்கும், அவனால் படைக்கப்பட்ட உயிரினத்திற்கும், இடைத் தொடர்பு, ஒற்றுமை வேற்றுமை, இரண்டையும் இணைக்க முயலும் கருத்துக்கள், அவற்றின் இயல்புகள் முதலியவற்றின் நுட்பமான, விரிவான ஆராய்ச்சியாகும். சமயமும் தத்துவமும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவை. சமயம் என்பது பாதை. தத்துவம் என்பது அப்பாதையில் செல்லும் அனுபவத்தில் கிட்டுவது. எனவே சமயங்கள் வேறுபடுவது போல் அவற்றின் தத்துவங்களும் வேறுபடும். ஆனால் சமயங்களும் அவற்றின் தத்துவங்களும் உணர்த்தும் முடிவு இறுதில் இறைவன் ஒருவன் என்பதே. சமயங்களைப் பற்றிப் பேசின் அவை பன்மடங்கில் விரியும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம். அவை பற்றிப் பிரிதொரு இழையில் பேசுவோம்.

ஆனால் நான் இங்கே கூற விளைந்தது சமயச் சார்பற்ற இறை நம்பிக்கை பற்றியும், இறைவனைத் தொழுதே எந்தக் காரியத்தையும் துவங்க வேண்டும் எனும் தத்துவத்தையும் விளக்க முற்பட்டதே. உயிர்கள் மலநீக்கம் பெற்று இறைவனின் திருவடிப்பேற்றைப் பெறுதலே முக்தி என்பார்கள். அதனை அடைவதே வாழ்வின் குறிக்கோள் என்கிறார்கள் அறிஞர்கள். எனவே தொழுவது, வணங்குவது, சதா இறைவனைத் தொட்டே காரியங்கள் ஆற்றுவது என்பவை வாழ்க்கை ஒழுக்க முறை ஆகும். அதானாலேதான் வள்ளுவரும் இறை வழிபாடாகிய, கடவுள் வாழ்த்திலிருந்து தன் கருத்துக்களை ஆரம்பிக்கின்றார். அதைப் போல் வணங்குவது என்பதற்கு பணிதல், தொழுதல் என்பது தமிழில் அர்த்தம். பணிவு இருக்கும் இடத்தில் எல்லாம் வந்து நிறையும் என்பதும் உண்மை.

பாதங்களைப் பிடித்தல் என்றால் உண்மையில் ஒருவரின் கால்களைப் பிடித்துக் கொள்வதல்ல. அவர் நடக்கும் பாதையினைப் பின்பற்றுவேன் என்பது. அதுவும் ஒருவகை உருவகமே. முன்னர் காலங்களில் காடுகளில் ஒற்றையடிப் பாதையைப் பார்த்தே மனிதர்கள் நடப்பார்கள். ஏன் என்றால் நமக்கு முன்னரே ஒருவர் போயிருக்கிறார் அதுவே சரியான வழியாக இருக்கும் எனும் நம்பிக்கையும், பாதுகாப்புணர்வுமே. அதைப் போலவே ஒரு சித்தாந்ததில் நம்பிக்கை வைத்து அதன் தலைமையின் பாதங்களைத் தொடருதல் என்பது பொருள்.

தொழுதலிலும் முறைகள் உள்ளன. உண்மையில் தொழ வேண்டியது உங்களின் அறிவுக் கண்ணைக் கொண்டு அகத்தே உறைந்திருக்கும் இறைவனின் பாதங்களைப் பார்த்துப் பணிவதே சரியான முறை. கூழைக் கும்பிடு போட்டு வணங்குவதும், முகத் துதிக்கு வணங்குவதும், யார் காலிலும் தங்கள் சுயநலத்திற்காக அரசியல் வாதிகள் செய்யும் கும்பிடெல்லாம் வெறுக்கத்தக்க நடிப்புக்களே. எனவே இறைவனைப் பணிதல் என்பது முன் கூறியது. சாஷ்டாங்க நமஸ்காரமும் உண்டுதான், ஆயின் அவையெல்லம் இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டும். மூத்தோரையும் வணங்குதல் நலனே. ஆனால் அவையெல்லாம் உள்ளத்தின் ஒப்புதலோடும் உண்மையோடும் நடக்கவேண்டிய ஒரு ஒழுங்கு. பொய்யாகவும், போலித்தனமாகவும் காட்டும் பணிவில் ஒருவர் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளுகிறார் என்பதே உண்மை.

உள்ளத்தில் தெய்வம் இருப்பது உண்மையானால், யாருக்கும் அஞ்சாத உடல் மொழி கிடைக்கும். அதாவது ஆணவமற்ற ஆனால் திடமாக நிற்கும், நடக்கும் வழக்கம் வரும். ஆங்கிலக் கலாச்சாரத்தில் டை கட்டுவதின் மகிமை என்னவென்றால் நிமிர்ந்து செயல் பட வேண்டும் என்பதற்கே. அதைப் போலவே யோக மார்க்கங்கள் அறிந்தவர்கள் நேரே நிமிர்ந்தே செயல் படுவார்கள்.

எனவே தெய்வம் தொழுதல் சாலவும் நன்று. ஒரு காரியத்தைத் துவங்கும் முன்னர் இறையை வணங்கித் துவங்கினால் வெற்றி நிச்சயம்.

கணிஞன்

எல்லாம் கற்றறிந்தும் கடவுள்தாள் ஏற்காதோர் அறியாதவரேயாவார் என்பது இப்பாடலின் சாரம்.

இறைவனைது நற்றாள் தொழாவிட்டால் கல்வியினால் உறும் பயன் ஒன்றுமில்லை என்று கூறும் குறள் இது. கற்றவரும் ஏன் தொழவேண்டும்? நற்றாள் தொழுவது எப்படி?

இறைவனின் பாத மலர்களை ஒருமையில் தாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. இவ்விதமே ஏனைய பாடல்களிலும் அடி/தாள் என ஒருமையிலேயே குறள் குறிப்பிடுகிறது. தாள்தொழல் என்பது பற்றிய தண்டபாணி தேசிகர் குறிப்பு இவ்வேளையில் அறியத்தக்கது: 'இவ்வதிகாரத்து (கடவுள் வாழ்தது), 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்'.

சமணநூல்களில் பயிலப்பட்டுள்ள பிராகிருதச் சொல்லான "கேவல ஞானம்" என்பதையே வள்ளுவர் இங்கு வாலறிவு என்று குறிக்கிறார் என்பது பொதுவான கருத்து. இச்சொல்லுக்குத் தமிழில் "கடையிலா அறிவு", "வரம்பற்றஅறிவு", "முழுதுணர்", "வினையின் நீங்கி விளங்கிய அறிவு", "அலகிலா அறிவு", "முற்றறிவு" என்று பொருள் கொள்வர். 'வாலறிவு' என்பதற்கு குற்றமற்ற அறிவு என்பது பொருள் என்று தமிழறிஞர்கள் வீளக்குவர். கொல் என்பது ஐயப் பொருளில் வரும் என்று தொல்காப்பியம் கூறும். ஆனால்'என்' என்பது வினாப் பொருள் தருதலால் 'கொல்' என்பதை அசைநிலை என்றும் கொள்வர். இப்பாடலில் வரும் என்கொல் என்பதற்கு 'என்னையோ' என வினாப் பொருளே பொருந்தும். 'வழக்கிலும் 'நீ செய்வது என்னவோ?' என வினாவின்மேல் ஐயப்பொருளைத் தரும் ஓகாரம் இணைத்து வழங்குதலும் காண்க' என உரைப்பார் ச தண்டபாணி தேசிகர். வள்ளுவர் தாம் கூறவந்த கருத்துகளுக்கு வலிமையும் நயமும் சேர்ப்பதற்காகவும் மொழிநடையில் அளபெடையைப் பயன்படுத்துவார். இக்குறட்பாவில் அமைந்துள்ள 'தொழாஅர்' என்னும் அளபெடையும் வாலறிவனை நெடும்பொழுது தொழவேண்டும் என்னும் கருத்தினை வலியுறுத்துவதற்காக அமைந்தது என்பர்.

கற்றதன் பயன் மெய்யுணர்வு பெறுதல் அல்லது வீட்டுலகு நோக்கிச் செல்லுதல் என்ற பொருளிலே மணக்குடவர் உரை அமைகிறது. அதைப் பின்பற்றியே பரிமேலழகரும் இன்றைய ஆசிரியர்கள் சிலரும் அதே பொருள் தோன்றும்படி இக்குறளை விளக்கிச் சென்றனர். அதாவது இறைவன் திருவடியைப் பற்றிப் பேரின்ப நிலையைப் பெறுதலன்றிக் கல்வியினால் பயன் ஏதும் இல்லை. கட்டறுத்து வீடு பெறுதலே கல்வியின் குறிக்கோளாகும். இறைவனின் திருவடியைத் தொழுதாலன்றி இக்கட்டு ஒழியாது. ஆதலால் வழிபாடு செய்யாதவர் கற்ற கல்வியெல்லாம் பயனற்றது என்று இவர்கள் உரைகள் கூறும்.

இக்குறளுக்கு நாமக்கல் இராமலிங்கம் தரும் விளக்கவுரை சிறப்பாக உள்ளது: "கல்வி கற்பது அறிவுக்காக. நாம் எவ்வளவு கல்வி கற்றாலும் அதிலிருந்து அறிந்து கொண்ட அறிவுக்கு மேல் இன்னும் அறியவேண்டிய அறிவு இருந்து கொண்டே இருக்கிறது.அந்த அறிவின் எல்லை எங்கே முடிகிறது என்று நாடுகின்றபோது அது நாமறிந்த அறிவுக்கு எட்டாத அந்த அறீவின் பூரணத்தைத்தான் 'வாலறிவன்' என்றும் 'பகவன்' என்றும் சொல்லுகிறோம். அந்தப் பகவான் என்ற பூரண அறிவிற்கு மிகவும் குறைந்ததுதான் நம்முடைய அறிவு என்பதை ஒப்புக் கொள்ளாவிட்டால் நாம் கற்ற கல்வியின் பயன் என்னவோ! ஒப்புக் கொண்டால் அதற்கு வணங்க வேண்டும்." முதல் குறட்பாவான 'அகர முதல எழுத்தெல்லாம்' என்ற குறளுக்குக் கருத்துரையாக 'எழுத்தைக் கொண்டு எழுதினவனை எண்ணிப் பார்க்கிறோம்.அதேபோல உலகத்தைக்கொண்டு அதை உண்டாக்கினவரை எண்ண வேண்டும்.'என்று கூறிய நாமக்கல் கவிஞர் அடுத்த குறளுக்கு இயைபாக, 'அப்படி எண்ணாமல் பல நூல்களைக் கற்றவர்களிலும் கூட அநேகர் அவனை வணங்க மறுக்கிறார்களே' என்று உரைத்தார். இவ்வுளக்கவுரைப்படி 'வாலறிவன் ஆகிய கடவுள் அறிவின் பூரணம்; எல்லையற்ற அறிவின் எட்டாத எல்லை; கல்வியின் இலக்கு இறைவனே'.

கடவுளிடம் சரணடையாமல் போனால் கல்வி என்பது வீணாகிப்போகும்; அனைததுக் கல்வியும் அறிவும், தூய குணமாகிய கடவுள் என்னும் இலக்கை நோக்கிச் செல்லவேண்டும் என்று சொல்வதாக இக்குறள் அமைகிறது என்பது பொதுவான கருத்து. முதல் குறளில் இறைவன் உண்மை விளக்கினார். அடுத்த குறளிலே படித்தவர் அனைவரும் அந்தக் கடவுளை வணங்கவேண்டும் என்று சொல்கிறார். எவ்வளவுதான் படித்திருந்தாலும், அக்கல்வியின் பயன் அடைய இறைவனைத் தொழுதே தீர வேண்டும் என ஆழமாகச் சொல்கிறார்.

'இறைவன் இருக்கிறார் சரி; நான் என் மட்டில் இருக்கிறேன்; எனக்கும் அவருக்கும் தொடர்பற்ற நிலை இருந்துவிட்டு போகட்டுமே; அதனால் என்ன ஆகும்?' இப்படிச் சிந்திப்பவர் ஒருவகை மாந்தர். மற்றும் சிலர் பலநூல்கள் கற்றதனால் செருக்குற்று, தான் அறியாதது எதுவும் இல்லை, தன்னைப் போல் யாரும் இல்லை என்று நடமாடுவர். 'கடவுள் என்று ஒன்றில்லை.அறிவினும் மிஞ்சிய ஆற்றல் உண்டோ?' என்று இவர்கள் கூறுவர். கல்வி பெற்றதனாலேயே இறைவன் இல்லை என்று துணிந்ததாகவும் சொல்வர். இத்தன்மைத்தான எண்ணங்கள் கொண்ட கற்றவர்க்குத் தெளிவுரை கூறும் குறள் இது. கடவுளை வணங்கினால் கல்வி கற்றதற்குப் பொருளும் பயனும் உண்டாகும். அப்பொழுது கற்றது கை மண் அளவு கல்லாதது உலகு அளவு என்பது தெளிவாகும்.

இறைவன் உள்ளான்; அவன் முற்றறிவு உடையவன் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. அவன் எங்கும் இருக்கிறான்; அவன் எல்லாம் அறிந்தவன். நூல் கற்றோரை அந்த 'வாலறிவனைத் தொழுக' என்று விரைவுபடுத்தல் முதற்கண்ணேயே தெளிவாகிறது. தொழாஅரெனின் என்னும் அளபு கொண்ட எதிர்மறைக் கூற்றில் 'இறைவன் தாளைத்தொழுதே தீரல் வேண்டும். இல்லையேல் வாழ்வு என்னாம்! அந்தோ!' என்னும் உள்ளுறையும் பொலிவது காண்க என்பார் திரு வி க. கல்வியின் நோக்கம் கடவுள் அறிதல் தவிர கடவுளின் நற்றாள் தொழவும் வேண்டும் என்பது வள்ளுவம்.

முற்றறிவு உடைய இறைவனை எப்படித் தொழுவது? இறைவனை உயிர்க்கூட்டத்தின் தலைவனாக எண்ணி, நம்மைப் போல் உருவம் கொண்டவனாக உருவகம் செய்வது நம் எல்லோருக்கும் எளிதாக இருக்கிறது. எங்கும் நிறைந்த கடவுளின் உருவை யாராலும் வரையவோ செதுக்கவோ முடியாது. என்றாலும் கடவுளுக்கு இங்கு உருவம் கூறப்படுகிறது. அதுதான் நற்றாள். (முன்னாட்களில் புத்தரின் திருவடிகள் வணங்கப்பட்டன என்பதாக அறிகிறோம்.) நற்றாள் தொழல் என்பது பெற்றோரைத் தொழுதல், முன்னோரைத் தொழுதல் என்பது போன்ற வழிபாடுதான். நற்றாள் தொழல் என்பது இறைவனின் திருவடிகளை மனத்துக்குள் உறுதியாக வரித்துக் கொண்டு அவனது அருளை வேண்டுவது.

கடவுளை நினை என்பதே பகுத்தறிவுப் பயனாக இருக்கவேண்டும் என்பது இக்குறள் கூறும் கருத்து.

ஒளியுரை

குறளிசை

குறள் 1 1. இறை வணக்கம் குறள் 3
முகப்பு

குறள் 3

குறள் ௩

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

சீர் பிரிக்கப்பட்ட குறள்

மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

பதவுரை

மலர்-மலரின்
மிசை-கண்
ஏகினான்-நடந்தவன்
மாண்-மாட்சிமைப்பட்ட
அடி-தாள்
சேர்ந்தார்-இடைவிடாது நினைந்தவர்
நிலமிசை-உலகின்கண்
நீடு-நெடிது
வாழ்வார்-நிலைபெற்றிருப்பார்

ஆசிரியருரை

மணக்குடவர்

மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார்.

'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.

காலிங்கர்

மலர்மிசை ஏகினான் என்பது எல்லாருடைய நெஞ்சத்தாமரையினுஞ்சென்று பரந்துள்ளான். மாணடி என்பது மாட்சியுள்ள அடி நிலமிசை நீடுவாழ்வார் என்பது நித்தராயுள்ளார். இந்நிலத்தின்கண் இவ்வாறு வணங்கி வழிபட்டு எவ்வுயிர்க்கும் உயிராய் நின்ற இறைவனது குற்றம் தீர்ந்த அடியினைச் சேர்ந்தார் யாவர் மற்று அவரே முத்தர் ஆவார் என்றவாறு

பரிமேலழகர்

மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்)

பரிதியார்

பக்த சனங்கள் இட்ட புஷ்பத்தின் மேல் எழுந்தருளி இருக்கும் சிவன் பாதத்தை மனசிலே பற்றவைத்தார் பூமியின்கண் சகல பாக்கியமும் அனுபவிப்பார்

தேவநேயப் பாவாணர்

மலர் மிசை யேகினான் மாண்அடி சேர்ந்தார் - அடி யாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் நினைந்த மட்டில் விரைந்து சென்றமரும் இறைவனின் மாட்சிமைப்பட்ட அடிகளை அடைந்தவர்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா வுலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வார்.

மலர் என்னுஞ்சொல் தனித்துநின்று மனத்தைக் குறியாமையாலும், ஏகினான் என்னுஞ் சொல்லாட்சியாலும், மலர்மிசையேகினான் என்பது இயல்பாக இறைவன் பெயராதற்கு ஏற்காமையாலும், 'பூமேல் நடந்தான்' என்னும் அருகன் பெயரையே ஆசிரியர் இறைவனுக்குப் பொருந்துமாறு ஆண்டார் என்பது தெரிகின்றது. "மலர்மிசை நடந்தோன்" என்று இளங்கோவடிகளும் கவுந்தி யடிகள் கூற்றாகக் கூறுதல் காண்க (சிலப். 10:204.). சமணர் தம் பொய்யான சமயத்தை விட்டுவிட்டு மெய்யான கடவுளை வணங்க வேண்டுமென்பது இக்குறளின் உட்குறிப்பு.

அடியாரின் உள்ளத்தாமரை நோக்கி ஏகுவானை ஏகினான் என்று இறந்தகால வாய்பாட்டாற் கூறியது, விரைவு பற்றிய கால வழுவமைதி . அடிசோர்தல் - இடைவிடாது நினைத்து அதற்கேற்ப ஒழுகுதல்.

மு.வரததாசனார்

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

வ. உ. சிதம்பரம்பிள்ளை

பொருள்-பூமேல் சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தவர் நிலவுலகின்கண் நெடுங்காலம் வாழ்வர்.

அகலம்- அடி என்பது சாதி ஒருமைப் பெயர். பூமிசை நடந்தான் என்பது ஒரு மதக் கடவுளின் பெயர். மலர் என்பதற்கு உள்ளக் கமலம் என்று உரைப்பாரும் உளர். அவ்வாறு உரைப்பது வலிந்து பொருள் கோடலாகும்.

கருத்து - கடவுளை உணர்ந்தோர் நிலவுலகில் நெடுங்காலம் வாழ்வார்.

திருக்குறளார் வீ.முனிசாமி

உள்ளக் கமலத்தில்-மனத்தில்-சென்றிருபபவனான, இறைவனுடைய மாட்சிமைப்பட்ட அடிகளை எப்போதும் நினைப்பவர்கள், உலகில் அழிவின்றி வாழ்வார்கள்.

பேரறிஞர் வ.சுப.மாணிக்கனார்

நெஞ்ச மலரில் இருப்பவன் அடியை நினைப்பவர், இவ்வுலகில் நெடுங்காலம் வாழ்வர்.

கலைஞர் மு.கருணாநிதி

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

சாலமன் பாப்பையா

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

முனைவர் கோ. பெரியண்ணன்

அடியார்களின் மனமாகிய மலரின் மேல் தங்கியிருப்பவன் இறைவன். அவர் திருவடிகளை சேர்ந்து வணங்கியவர்கள் பூமியில் நெடுங்காலம் வாழ்வார்கள்.

முனைவர் சிங்காரவேலு சச்சிதானந்தம்

(தாமரை) மலரையொத்த உள்ளத்தின் கண்ணே வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை சிந்திப்பவர் நிலவுலகில் நீண்டகாலம் (இன்புற்று) வாழ்வார்.

ப. வீரராகவன்

யார் நீடு வாழ்வார்கள்?
கடவுளை வணங்குபவர்கள் நீடு வாழ்வார்கள். ஒழுக்க நெறி நின்றாரும் நீடு வாழ்வார்கள்.

உத்தம புத்திரர்

மனமெனும் மலரின்கண் நிறைந்தவனின் சிறந்த திருவடிகளைப் பின்பற்றுபவர், நிலமெனும் இவ்வுலகத்தின் கண் நீண்ட காலத்திற்கு வாழ்வார்.

நினைத்தவுடன் மனத்தே விளைகின்ற, மேவுகின்ற இறைவனது பாதங்களைத் தொடருவதால், மன அழுத்தங்கள் நீங்கப்பெற்று மனிதர்கள் இப் பூவுலகில் இசைந்தொழுகி நீண்ட காலத்திற்கு வாழ்வார் என்பது பொருள்.

எப்போதுமே நல்லதை நினைத்தல் வேண்டும் என்பது பொதியவைத்த பொருள். அதாவது எல்லாவற்றிலும் வியாபித்திருக்கும் இறைவன் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்; பூவிலும் இருக்கிறார், புல்லிலும் இருக்கிறார். ஆனால் பூவென்பது அழகானது, சிறப்பானது, மென்மையானது, மணத்தையும், மகிழ்வையும் தருவது. அதுவும் இங்கே சொல்லும் மலர் எத்தகைய பூ, மனமெனும் மலரில், இதயத்தாமரையில். நாம் எதை எண்ணுகின்றோமோ அதுவாகவே ஆவோம் என்று பின்னர் சொல்லும் வள்ளுவர், எனவே அப்படி எண்ணுவதைக் கூட அழகாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே மலர்மிசை ஏகினான் என்றார். அதிலும் பாதங்கள் கூட மாண்பு மிக்கவை.

உளத் தாமரையில் இறைவன் முன்னமேயே இருக்கிறான் என்பதும் பொதிய வைத்த மறை பொருள். இறைவன் மலர்மிசை ஏகினான், ஏறி அமர்ந்தான் அல்லது நிறைந்தான் என்று இறந்த காலத்தில் சொல்லப்பட்டது அந்தக் காரணத்திற்காகவே.

ஆக இறைவனைத் தேடி எங்கும் அலையத் தேவையில்லை. உங்களின் உளத் தாமரையிலேயே அமர்ந்திருக்கிறார் என்பதுவும், எனவே ஒரு மலரை இன்னும் மலர்கள் கொண்டு அர்ச்சிக்கத் தேவையே இல்லை என்பதும் கூட விளங்குகின்றது. ஆயின் அவரின் மாண்புமிகு பாதங்களைத் தொழுதால் மட்டுமே இந்த வையகத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்பதும் இக்குறளின் முடிவு.

மனதோடு நிறைந்த இறைவன்பால் சரணடையும் இறை வழிபாடானது உலகில் நீண்ட இன்ப வாழ்வைக் கொடுக்கும்.

கணிஞன்

கடவுளின் திருவடியை நினைப்பவர் இந்நிலவுலகின்கண் நன்கு வாழ்வர் என்னும் குறள்.

மலர்மிசை ஏகினானது மாணடி சேர்ந்தவர் நீடு வாழ்வார் எனக் கூறும் பாடல் இது. மலர்மிசை ஏகினான் யார்?

'மலரின்மேல் நடந்தான்' என்று மணக்குடவர் கூறியதும் பரிமேலழகர் குறிப்பிடுகிற 'பிறிதொரு கடவுள்' யார்? மயிலை சீனி வேங்கடசாமியின்கருத்து நோக்கத்தக்கது: 'மலர்மிசை ஏகினான் என்பது பகவான் புத்தரைக் குறிக்கிறது எனக் கருதலாம். இங்கு 'மலர்' என்பது தாமரைப் பூ. பகவான் புத்தர் பிறந்தவுடனேயே ஏழடி நடந்தார் என்றும் ஒவ்வொரு அடியை வைக்கும்போது தாமரைப்பூ தோன்றி அவருடைய பாதங்களைத் தாங்கிக் கொண்டன என்றும் பௌத்த மதநூல்கள் கூறுகின்றன. ஆகவே மலர்மிசை ஏகினான் என்பது புத்த பகவானைக் குறிக்கிறது என்பது தவறாகாது.' என்றார். மேலும் அவர் 'இந்தச் சொற்றொடர் அருகக் கடவுளையும் சுட்டுகிறது., என்னை? அருகப் பெருமான் எழுந்தருளும்போது தாமரைப் பூக்கள் தோன்றி அவருடைய திருப்பாதங்களைத் தாங்குகின்றன என்பது சமண (ஜைன) சமயக் கொள்கை. இந்தக் கொள்கையைச் சமண சமய நூல்களில் காண்கிறோம். இதற்குப் பல மேற்கோள்களைக் காட்டக் கூடும். இதனால் மலர்மிசை ஏகினான் என்பது பகவான் புத்தரைக் குறிக்கிறது போலவே, அருகக் கடவுளையும் சுட்டுகிறது என்பது தெளிவாகிறது' என்றார். மேலும் இத்தமிழறிஞர் சைவ, வைணவ சமயக் கடவுட்களுக்கு இச்சொற்றொடர் பொருந்தாது என்றும் நிறுவியுள்ளார். 'மலர்மிசை ஏகினான் என்ற தொடர் அருகனையும் புத்தனையும் குறிப்பதை மண்டல புரூடர் நிகண்டால் அறியலாம்' என்று இரா சாரங்கபாணியும் குறித்துள்ளார். மற்றும் சிலர் 'மலர்மிசை ஏகினான்' என்ற தொடருக்கு 'பரந்த மேலிடமாகிய அண்டவெளியினைக் கடந்து நிற்பவன்' என்று பொருள் கொள்வர். “மலர்தலை உலகம்“ என்பதற்குப் பரந்து விரிந்திருக்கும் உலகம் என தமிழ் இலக்கியங்களில் பொதுவான பொருளாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்ற புறநானூற்றுப் பாடலில் 'மலர்தலை' என்பது பரந்த இடத்தையும், 'மலர்தலை உலகம்' என்பது பரந்த பூவுலகினையும் குறிக்கிறது என்று கூறி 'மலர்தல்' என்ற வினைச்சொல்லுக்கு 'விரிதல், பரவுதல்' என்று பொருள்; 'மிசை' என்னும் சொல்லுக்கு 'மேலிடம்' என்று பொருள்; வினைத்தொகை ஆகிய 'மலர்மிசை' என்பது 'மலர்ந்த மிசை' என்று விரியும்; இதற்கு 'பரந்த மேலிடம்' என்று பொருள்; இது அண்டவெளியினைக் குறிக்கும்; 'மலர்தலை' என்பது பரந்த இடத்தையும், 'மலர்தலை உலகம்' என்பது பரந்த பூவுலகினையும் குறிப்பதைப் போல 'மலர்மிசை' என்பது அண்டவெளியினைக் குறிப்பதாக இவர்கள் விளக்கம் தருவர்.

“மலர்மிசை ஏகினான்” என்பதற்கு மூன்று வகையான விளக்கங்கள் கிடைக்கின்றன. முதலில் மணக்குடவர் சொல்லும் 'மலர் மேல் நடந்தவன்' (இதைப் பரிமேலழகரும் எதிரொலிக்கிறார்). இரண்டாவது காலிங்கர்-பரிமேலழகர் கூறிய 'உள்ளக் கமலத்தின்கண் தோன்றுபவன்'. கடைசியாக 'அண்டவெளியில் பரந்துள்ளான்'. இவற்றுள் எது சரி?

“மலர்மிசை ஏகினான்” என்ற சொற்றொடர்க்கு “மலர் மேல் நடந்தவன்” என்பது நேர் பொருள். இதில் மணக்குடவரும் பரிமேலழகரும் உடன்படுகிறார்கள். பரிமேலழகர் “மலர்மிசை ஏகினான்” என்பதற்கு மலரை மனதிற்கு உருவகப்படுத்தி, அன்பால் நினைத்தவர்களின் உள்ளக் கமலத்தின்கண்ணே தோன்றுவான் என்று பொருள் தருவார்.

'மலர்மிசை நடந்த மலரடி யல்லதுயென் தலைமிசை யுச்சி தானணிப் பொறாஅது' ( சிலப்பதிகாரம், நாடுகாண் காதை (200 - 205))

(பொருள்: எனது தலையினுச்சியும் பூவின் மீது நடந்த தாமரைபோன்ற அடிகளை அணியப் பொறுக்கு மல்லது பிறிதொன்றனையும் அணியப் பொறாது.) என்று கவுந்தியடிகள் அருகக் கடவுளை வாழ்த்துவது 'அருகக் கடவுள் மலர்மேல் நடந்த மலர் போன்ற திருவடிகளையுடையவன்' என்ற கருத்தில் அமைந்தது. வள்ளுவர் குறிப்பிடுவதும் அருகக் கடவுளே என்பதற்கு இவ்வரிகள் சான்றாயின என்பது ஒருசாரார் கருத்து. இளங்கோ அடிகளின் காப்பியம் சான்று பகர்வதாலும், மணக்குடவர் உரைப்பொருளாலும், பரிமேலழகர் மறைமுகமாக ஒப்புக்கொள்வதாலும் வள்ளுவர் குறிப்பது அருகனையோ அல்லது புத்தனையோ எனலாம் என்று சிலர் தம் கருத்தை முன்வைப்பர். ஆனால் சமணரின் ஆதிநாதர் அல்லது புத்தர் மலரிலே நடந்தவர் என்று பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் 'நிலமிசை நீடுவாழ்தல்' என்பது சமண-புத்தக் கொள்கைக்குப் பொருந்தி வராது. அருகனும் புத்தனும் மனிதப் பிறவிகளே. மலர்மிசை ஏகினான் என்பதற்கு மனிதரைச் சார்ந்து பொருள் கொள்ளமுடியவில்லை. எனவே இக்குறள் அவர்களைக் குறிக்கவில்லை என்பது தெளிவு. இறைவன் அல்லது இறைவி தாமரையில் அமர்ந்திருப்பது என்ற பொதுவான கருத்தின் அடிப்படையில் மனம் தாமரை மலராக உருவகிக்கப்படுகிறது. மலர் அழகானது; சிறப்பானது; மென்மையானது; மணத்தையும், மகிழ்வையும் தருவது; தூய்மையானது. அழகிலும் தூய்மையிலும் ஒளியிலும் உள்ள இறைவன் மலர்மேல் இயங்குகிறான். எவ்வளவு இனிய காட்சி இது! உள்ளத்தாமரையில் உறைபவன் என்பதும் ஏற்புடைத்தே. 'அண்டவெளியில் பரந்துள்ளவன்' என்பதும் நல்ல விளக்கமாகும்.

ஏகினான் என்பதற்கு நடந்தவன், சென்றவன், பரந்துள்ளவன், எழுந்தருளினவன், விளங்குபவன் எனப் பல்வேறு வகையாகக் கருத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. பரிமேலழகர் விளக்கப்படி மலர்மிசை ஏகினான் என்பது இறந்த காலத் தொடராய் இருந்தாலும் அது மலரின்மீது நடந்தவன், நடப்பவன், இன்னும் நடப்பான் என்று முக்காலங்களிலும் பொருந்துவதாகப் பொருள் அமையும்.

சேர்ந்தார் என்றதற்கு அடைதல் என்பர் சிலர். இறைவனடி உடம்பாற் சேர்வது இயலாதலால் சேர்தல் என்பதை நினைத்தல் என்று கொள்ளவேண்டும். அடிசேர்ந்தார் என்ற தொடர்க்குப் பரிமேலழகர் 'இடைவிடாது நினைத்தல்' என்று நல்லதோர் விளக்கம் தருகிறார். இடைவிடாமல் எண்ணுதல் என்பதை மறவாதே நினைப்பர் என்று கொள்ளலாம். இச்சொற்றொடர் பற்றிய தண்டபாணி தேசிகர் குறிப்பானது: 'இவ்வதிகாரத்து (கடவுள் வாழ்தது), 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்'. இவ்விளக்கம் வள்ளுவர் தம் நூலில் சமயம் புகுந்துவிடக்கூடாது என்பதில் எவ்வாறு கருத்தூன்றி இருந்தார் என்பதையும் புரிய வைக்கிறது.

நிலமிசை நீடுவாழ்வார் என்பதற்கு இவ்வுலக இன்பமும் வீட்டுலகப் பேறும் பெறுவர் என்றும் கூறப்பட்டது. இவ்வாறு கூறுவோர் 'நிலமிசையும் நீடு வாழ்வார்" என்று கொண்டனர். மிசை நிலம் என்று மாற்றி மேல் நிலம் அதாவது வீடு என்றும் விளக்கம் உள்ளது. நிலவுலகில் நீண்ட நாடகள் வாழ்தல் சிறப்புடையது என்பது இப்பாடலின் வழி கூறப்படும் திரண்ட கருத்தும் ஆயிற்று. நீண்ட நாள் வாழ கடவுளைத் தொழவேண்டும் என்பது ஒருவகையான தூண்டுதலாகக் கொள்ளவேண்டும் என்பர்.

இக்குறளில் இறைவனுக்கு உருவமும் அவனை வணங்குவதன் பயனும் சொல்லப்படுகின்றன. உருவம் தாள் வடிவாகப் படைக்கப்பட்டு மாணடி என்று சிறப்பிக்கப்படுகிறது. இறைவனது அடி மாண்புடையது; அதைச் சென்று அடைபவர்கள் நெடுநாள் வாழ்வார்கள் என்பது இப்பாடலின் கருத்து.

ஒளியுரை

குறளிசை

குறள் 2 1. இறை வணக்கம் குறள் 4
முகப்பு

குறள் 4

குறள் ௪

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

சீர் பிரிக்கப்பட்ட குறள்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

பதவுரை

வேண்டுதல்-விரும்புதல்
வேண்டாமை-வெறுத்தல்
இலான்-இல்லாதவன்
அடி-தாள்
சேர்ந்தார்க்கு-இடைவிடாது நினைந்தவர்க்கு
யாண்டும்-எக்காலத்தும்
இடும்பை-துன்பம்
இல-உளவாகா

ஆசிரியருரை

மணக்குடவர்

இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர். பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார்.

காலிங்கர்

உலகத்து யாதானும் ஒருபொருளை விரும்புதலும் விரும்பாமையும் இல்லாத இறைவன் அடியை அன்பொடு சேர்ந்தார்க்கு எவ்விடத்தானும் துயரம்இல்லை என்றவாறு.

பரிமேலழகர்

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)

தேவநேயப் பாவாணர்

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு; யாண்டும் இடும்பை இல-எங்கும் எக்காலத்தும் துன்ப மில்லை.

விருப்பு வெறுப்பினாலேயே துன்பங்கள் வருவதனாலும், விருப்பு வெறுப்பில்லாத இறைவனை யடைந்தவரும் விருப்பு வெறுப்பற்றவராயிருப்பராதலாலும், இறைவன் இன்ப வடிவினனாகவும் எல்லாம் வல்லவனாகவுமிருப்பதனாலும், அவனடியடைந்தார்க்கு எங்கும் என்றும் எவ்வகைத் துன்பமும் இல்லையென்பது.

மு.வரததாசனார்

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

குன்றக்குடி அடிகளார்

விருப்பு வெறுப்பில்லாத இறைவன் அடி சேர்ந்தார்க்கு எங்கும் துன்பமில்லை. விருப்பு வெறுப்பு துன்பங்களின் வாயில்கள். விரும்பியது கிடைக்காதபோதும், தாம் விரும்புவதையே பிறிதொருவர் விரும்பியபோதும் எல்லோருக்கும் கிடைக்காதபோதும், துன்பம் வருதல் தவிர்க்க இயலாதது. வேண்டாதது வந்தடைவதாலும் வெறுப்பதனாலும் வெறுக்கப்படுபவர் வெகுண்டு எழுவதாலும் துன்பம் வரலாம். விருப்பும் வெறுப்பும் இல்லாத இறைவனைத் தொழுதலின் வழி அத்தன்மையை அடைதலால் துன்பமில்லை.

திருக்குறளார் வீ.முனிசாமி

விருப்பும் வெறுப்பும் இல்லாதவனின் அடிகளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எக்காலத்திலும் துன்பமே உண்டாகாது

பேரறிஞர் வ.சுப.மாணிக்கனார்

விருப்பு வெறுப்பு இல்லாதவனை நினைத்தவர்க்கு என்றும் துன்பங்கள் இல்லை

கலைஞர் மு.கருணாநிதி

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

சாலமன் பாப்பையா

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

முனைவர் கோ. பெரியண்ணன்

விரும்புதலும், வெறுத்தலும் இல்லாத இறைவன் திருவடிகளை சேர்ந்தவர்களுக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை

முனைவர் சிங்காரவேலு சச்சிதானந்தம்

விருப்பும் வெறுப்பும் இல்லாத இறைவனின் திருவடிகளை சிந்திப்பவருக்கு எங்கும் எக்காலத்தும் துன்பமில்லை.

ப. வீரராகவன்

யாருக்குத் துன்பம் இல்லை?
கடவுளை வணங்க்குபவருக்குத் துன்பம் இல்லை.

உத்தம புத்திரர்

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு எங்கேயும் எப்போதும் துன்பம் இல்லை.

விருப்பு வெறுப்பே துன்பங்களுக்குக் காரணமாக இருப்பவை. ஆகையால் அவை இரண்டும் இல்லாத இறைவனின் பாதங்களை அடைந்தோருக்கு அவ்விதமே எங்கேயும், எப்போதும் எவ்வகைத் துன்பமும் இராது.

இறைவன் அடி சேர்தலையே, பாதங்களைத் தொழுவதையே வைணவர்கள் தங்கள் மதத்தில் முக்கியமாகக் கருதுகிறார்கள். அதைச் சரணாகதி தத்துவம் என்கிறார்கள். எனவே அதை உணர்த்தும்பொருட்டு மதச் சின்னமாக நாமத்தைக் கொண்டார்கள். நாமம் உண்மையில் என்புத்தியில் உன் பாதங்களே, நான் உன்பாதங்களையே சிந்திப்பேன், தொடருவேன், பின்பற்றுவேன் என்பதுவும் உன் பாதார விந்தங்களுக்கே என் புந்தியில் சரணடைந்தேன் என்பதும் ஆகும்.

இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் செயல்களுக்குக் காரணமாகியவராக இருப்பவர். அவருக்கு அல்லது அந்த விதிகளின் ஒழுங்குக்கு விருப்பு, வெறுப்புக்கள் என்பது கிடையாது. எனவே இறைவனாகிய பரம் பொருள் விருப்பு, வெறுப்பற்றவர் என்றாகின்றார்.

உயிர்களுக்குத்தான் விருப்பு, வெறுப்பு உண்டு. அவையே இன்ப, துன்பங்களுக்குக் காரணம். அதனாலேயே உயிர்கள் அவற்றில் உழல்கின்றன. இதில் புத்தரின் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதும் விளங்கும். ஆசை மட்டுமல்ல வெறுப்பும் துன்பத்திற்குக் காரணம் என்பது வள்ளுவரின் நுட்பம்.

சித்தம் தெளியப் பெற்றவர்கள் விருப்பு, வெறுப்பின்றிச் செயல் படுவார்கள். சுயநலமின்றி வாழ்வின் முக்கிய நோக்கமாகிய முக்தியையே எண்ணிச் செயல் படுகின்றவர்களுக்கு இயற்கையாகவே விருப்பு, வெறுப்பற்ற நிலையில், அதாவது பற்றற்ற நிலையில் பயணிக்கத் தோன்றும். இதையே சித்தர்கள் தாமரை இலைத் தண்ணீராய், இறந்தாரைப் போல் வாழ வேண்டும் என்றும் நிலையாமைத் தத்துவம் என்றும் சொல்கின்றார்கள். இறந்தாருக்கு விருப்பு, வெறுப்பு இருக்காது மேலும் புகழ்சி, இகழ்சி அவர்களைச் சஞ்சலப் படுத்தாது.

கணிஞன்

விருப்பு, வெறுப்பற்ற இறைவனை நினைப்பவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்களை உணரமாட்டார்கள் என்பது இக்குறளின் கருத்து.

வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவனது அடியைச் சேர்ந்தார்க்கு எப்பொழுதும் துன்பம் இல்லை எனக் கூறும் பாடல்.

வேண்டுதல் வேண்டாமை என்பது எதைக் குறிக்கிறது? துன்பம் நீங்குதல் எவ்விதம்?

உரை ஆசிரியர்கள் பொதுவாக 'வேண்டுதல் வேண்டாமை' என்பதைப் பொருள்மேல் வைத்து விளக்குகின்றனர்; அதாவது ஒரு பொருளை விரும்புதலும் அல்லது ஒரு பொருளை விரும்பாமையுமான குணங்கள் அற்ற கடவுள் இங்கு பேசப்படுகிறான். இது இறைவனின் பற்றற்ற நிலையைக் குறித்தது. சில உரையாசிரிரியர்கள் இறைவன் காய்தல் உவத்தல் அற்றவன் என்பதாக இக்குறளில் கூறப்படுகிறது என்கின்றனர். அதாவது 'இவன் வேண்டியவன், அவன் வேண்டாதவன் என்ற பாகுபாடு இல்லாதவன் இறைவன்; தன்னை நம்புகிறவனும் அல்லது நம்பாதவனும், மேலும் தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும் அவருக்கு ஒன்றுதான்; அவன் படைப்பில் அனைவரும் சமம். அதனால் தம்மை வணங்குபவர்க்கு எதையும் தருவதோ, தவறு செய்தோரைத் தண்டிப்பதோ என்றபடி இல்லை; எவரொவருக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எந்த ஒரு செயலையும் செய்யத் தேவையில்லாதவன்; நடுநிலையிலிருப்பவன்' என்பது இவர்கள் கூற்று. இவ்வுரையும் ஏற்கத்தக்கதே.

'அடிசேர்ந்தார்க்கு' என்ற தொடர்க்கு 'இறைவன் திருவடியை அடைந்தவர்களுக்கு' என்றும் 'இடைவிடாது நினைப்பவர்க்கு' என்றும் விளக்கங்கள் உள்ளன. இச்சொற்றொடர் பற்றிய தண்டபாணி தேசிகர் குறிப்பு சிறப்பானது: 'இவ்வதிகாரத்து (கடவுள் வாழ்தது), 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்'.

இறைவன் தாள் தொழுவதால் துன்பம் எப்படி நீங்கும்?

தன் அடிசேர்ந்தவனை இறைவன் விரும்புகிறான்; அதனால் அவன் துன்பங்கள் நீங்கும் என்று 'பயன் தரும்' பொருள் கொள்வது அவன் 'வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்' என்ற பண்புக்கு எதிராக அமையும். இக்குறள் கூறும் கருத்து அதுவாக இருக்க முடியாது. இறைவன் இவ்வுலக நிகழ்ச்சிகளைக் குறித்து காய்வோ உவப்போ இல்லாதவனாய், இவற்றால் பாதிக்கப்படாத பற்றற்றதாய நிலையில் உள்ளான் என்பதே வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதற்கு வள்ளுவர் கொண்ட கருத்தாக இருக்க வேண்டும். கடவுள் பற்றற்றவராதலால் அவனை இடைவிடாமல் நினைந்தோரும் பற்றற்றவராக இருப்பர்; ஆகவே அவர்களுக்கு என்றும் துன்பமில்லை என வள்ளுவர் கருதியதாகத் தோன்றுகிறது. விருப்பு வெறுப்பைக் கடந்தவனாகிய இறைவனைச் சேர்ந்தார்க்கு, அவ்விறைவனின் குணநலனாகிய வேண்டுதலும், வேண்டாமையும் இல்லாத தன்மையும் சேர்ந்துவிடுவதால், விருப்பு வெறுப்பில்லா நிலைக்குச் செல்வர். இந்தப் பக்குவம் வந்துவிட்டால் மனம் சமநிலைப்படும். எனவே துன்பம் அவரைத் தாக்காது. துயரம் நீக்க வள்ளுவர் காட்டும் வழி விருப்பு வெறுப்பற்ற நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்வது. விருப்பு வெறுப்பு கொண்ட மனநிலைதான் துன்பங்களுக்குக் காரணம். வேண்டுமென்கிற ஆசையும் அதனால் கிடைக்கும் இன்பம் என்கிற எண்ணமும், கிடைக்காததனால் விளையும் ஏமாற்றமும், கோபமும், வேண்டாமென்கிற வெறுப்பும், துன்பம் அளிப்பவை. இவற்றை விலக்கிவிட்டால் துன்பமில்லா நிலை அருகும். இவ்வாறாகத் துன்பம் உறா நிலை விளக்கப்படுகிறது.

ஒளியுரை

குறளிசை

குறள் 3 1. இறை வணக்கம் குறள் 5
முகப்பு

குறள் 5

குறள் ௫

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

சீர் பிரிக்கப்பட்ட குறள்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு

பதவுரை

இருள்-அறியாமை
சேர்-கலந்த
இரு-இரண்டு
வினையும்-செயலும்
சேரா-பொருந்தமாட்டா
இறைவன்-கடவுள்
பொருள்-மெய்ப்பொருள்
சேர்-சேர்ந்த
புகழ்-புகழ்
புரிந்தார்-விரும்பினார்
மாட்டு-இடத்தில்

ஆசிரியருரை

மணக்குடவர்

மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.

காலிங்கர்

அறியாமையாகின்ற இருள் காரணமாக வந்து இயைகின்ற நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் சேரா.

பரிமேலழகர்

இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்)

பரிதியார்

மும்மல விடதது ஆகிய பாவமானது இல்லை. (மும்மலம்: ஆணவம், கன்மம், மாயை) சிவகீர்த்தி பாராட்டுவாரிடத்து.

தேவநேயப் பாவாணர்

இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து; இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இரு வினையும் இல்லாதனவாகும்.

வழிதெரியாத இருள் போலிருத்தலின் அறியாமையை இருளென்றும், நல்வினையும் பிறவிக்கேதுவாமென்பது கொண்முடிபு (சித்தாந்தம்) ஆதலின் இருவினையுஞ் சேராவென்றும் கூறினார். மக்கள் எத்துணைப் பெரியோராயிருப்பினும் அவரின் அறிவாற்றலுங் காலமுங் குறுகிய வரையறைப்பட்டிருப்பதனாலும், அவரை மகிழ்விக்கக் கூறும் புகழுரைகளெல்லாம் உயர்வுநவிற்சியும் இன்மைநவிற்சியுமேயாதலாலும், எல்லாவாற்றலும் என்றும் நிறைந்திருக்கும் இறைவன் புகழே பொருளுள்ள புகழ் எனப்பட்டது. புரிதல் - விரும்பிச் சொல்லுதல். இறைவன் - எங்குந் தங்கியிருப்பவன். இறுத்தல் - தங்குதல். நல்வினை பிறவிக்கேதுவாவது கடவுள் வழுத்தொடு கூடாத போதும் தீவினையொடு கலந்த விடத்துமாம்.

மு.வரததாசனார்

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

நாமக்கல் கவிஞர்

இறைவன் அஞ்ஞானத்தால் உண்டாகிற நல்வினை தீவினையாகிய இரண்டுக்கும் அப்பாற்பட்டவன். அந்தப் பெருமையின் பொருளை உணர்ந்து விருப்பு வெறுப்பின்றி வணங்குபவர்களை இன்ப துன்பங்கள் என்ற இரண்டும் ஒன்றும் செய்ய முடியாது.

திருக்குறளார் வீ.முனிசாமி

அஞ்ஞானத்தினால் வருகின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

பேரறிஞர் வ.சுப.மாணிக்கனார்

இறைவனது உண்மைப் புகழை விரும்புவாரை அறிவில்லாத வினைகள் நெருங்கா.

கலைஞர் மு.கருணாநிதி

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

முனைவர் கோ. பெரியண்ணன்

இறைவனின் உண்மையான புகழைப் போற்றுபவர்களிடத்தில் அறியாமையால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளும் சேரமாட்டா.

முனைவர் சிங்காரவேலு சச்சிதானந்தம்

இருள் நிறைந்த அறியாமையால் விளையும் நல்வினை, தீவினை என்னும் இரு வினையும், இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து இல்லாதனவாகும்.

ப. வீரராகவன்

யாருக்குத் தீவினை சேராது?
இறைவனைப் புகழ்பவருக்குத் தீவினை சேராது.

உத்தம புத்திரர்

இறை எனும் மெய்பொருளைச் சேர்ந்து புகழ்ந்து புரிந்துணர்ந்துப் போற்றி ஒழுகுபவரிடம் அவர் அறியாமையால் விளைத்த நல்லவை, தீயவை எனும் வினைகளின் பயன்கள் சேர்வதில்லை.

இரு வினைகளாகிய பாவ, புண்ணியம் அல்லது நல்வினை, தீவினை ஆகியவற்றுள் அறியாமைக் காலத்தில் சேர்ந்தவையானவை, இறைவனின் மெய்ப்பொருளை உணர்ந்து தெளிந்து நிற்போரைச் சேர்வதில்லை.

இருள் என்பது அறியாமையைக் குறிக்கிறது. அறியாமை எனப்படுவது ஒருவரின் முற் பிறவியின் செயல் என்றும் கொள்ளலாம் அன்றில் இப்பிறப்பின் அறியாமையால் செய்யும் வினைகள் எனவும் கொள்ளலாம். சேர் என்பதால் அதை சேர்ந்த என்று இறந்த காலத்திற்கும், சேருகின்ற என்ற நிகழ் தொடர்ச்சிக்கும் அல்லது எதிர் காலத்திற்கும் கொள்ளலாம் என்பது வள்ளுவரின் நுணுக்கம்.

இறைவன் பொருள்சேர் என்பது இறைவனின் மெய்ப்பொருளை உணர்வது. அதாவது உயிர் ஐம்புலன்களில் பற்று அறுத்து, மாயை அற்று, அவை தம்மைத் தொடராத் தன்மையும் உணர்ந்து பேரின்பத்தைத் துய்க்கும் நிலை. அவ்வமயம் உயிருக்கு ஆன்மாவின் உண்மை நன்கு புலப்படும்; உயிரானது தத்துவப் பிணைப்புக்களிலிருந்து விடுபட்டு, அகவிருள் நீங்கி உள்ளுணர்வு பிறத்தலால் நாத முடிவுலுண்டான மெஞ் ஞானத்தைப் பெறும். அத்தகைய நிலையை அறிந்து, அதிலேயே ஒன்றி இசைந்து (புகழ்ந்து) நிற்போருக்கு, அவர்தம் பாவ, புண்ணியங்கள் தொடர்வதில்லை.

கணிஞன்

பொருள் முழுதும் விளக்கப்படாத 'இருள்சேர் இருவினை' என்ற சொற்றொடர் கொண்ட குறள் இது.

இருள்சேர் இருவினையும் இறைவனது உண்மைப் புகழைப் போற்றுவாரிடத்து சேரா என்பது இப்பாடல் கூறும் கருத்து. இருள்சேர் இருவினை எவை?

இறைவன் புகழை இசைத்துக் கொண்டு இருந்தால் அறியாமையால் வரும் இருவகை வினை உண்டாகாது என்பது இக்குறளுக்கு நேர் பொருள். அந்த இருவினை யாவை? அவை என்ன இருள் சேர்க்கிறது? இறைவன் புகழ் பாடினால் இருவினை எப்படி நீங்கும்?

செய்யப்படும் வினைகளனைத்திற்கும், அதாவது நமது அனைத்துச் செயல்களுக்கும், பலன் உண்டு என்பதும் அவை நல்வினையா அல்லது தீவினையா என்பதனைப் பொறுத்துப் புண்ணியம் என்றோ அல்லது பாவம் என்றோ கொள்ளப்படும் என்பது ஒருவகை நம்பிக்கை. இக்குறளில் இருள் என்னும் சொல் இருவினைகளைக்கும் பொருந்த வந்துள்ளது. தீவினை இருள் என்பதில் ஐயம் இல்லை. நல்வினையை இருள் என்றது ஏன்? இதற்கு விளக்கம் தருபவர்கள், நல்வினைப் பயனைத் துய்க்க துறக்க உலகம் செல்ல வேண்டும்; அதற்கு மறுபிறவி வேண்டும்; பிறப்பு என்றாலே துன்பத்திற்கு இடமாவது என்பது பொருள்; பிறவி நீங்கவேண்டுமானால் நல்வினை, தீவினை என்ற இரண்டினின்றும் நீங்குதல் வேண்டும்.எனவே நல்வினைக்கும் இருள் என்னும் அடைச்சொல் சேர்க்கப்பெற்றது என்றனர். ஆனால் இன்றைய அறிஞர்கள் இக்குறளில் சொல்லப்பட்டது இந்நம்பிக்கைதான் என்பதை ஒப்புக்கொள்வதில்லை. நல்வினை அறம் ஆகும்; அது வீட்டையும் பயக்கும். ஆதலால் இருவினையில் நல்வினையும் அடங்கும் என்பதை மறுப்பார் வ உ சி. நல்வினை இருள் இல்லை என்றால் இன்னொரு வினை எது? இருவினையை வேறுவகையில் விளக்கும் உரைப்பொருள்களாக 'அறியாமை', 'பொருள்களைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல்', 'யான் என்னும் இருள்சேரும் மனம்', 'தன்னல மயக்கம்', 'தெரிந்தும் தெரியாதும் செய்யும் இருவகைத் தீவினைகள்' என்பனவற்றைக் கூறினர்.

இன்னொரு வகை அணுகுமுறையில் இருவினை என்பது நல்வினை எது தீவினை எது என்று பாகுபாடு செய்யமுடியாத நிலை பற்றியது. அசைகின்ற நீரில் உருவம் எப்படி உள்ளபடி தெரிவதில்லையோ அவ்வாறே நல்வினைகளும் தீவினகளும் கூட திரிவுபட்டே தெரியும். நாம் செய்யும் செயல் நல்வினையா அல்லது தீவினையா என்பது அச்செயலின் விளைவுகள் யார் மீது எத்தகைய தாக்கத்தை அல்லது பாதிப்பை உண்டாக்குகிறது என்பதனைப் பொறுத்து அறியப்படும். இதனைத் தெளியாதபொழுது இருவினையுமே இருள் சேர்ப்பவையே. புலப்படாத் தன்மையினாலே இருவினயும் இருள் எனப்பட்டது. இவ்வாறாக இது விளக்கப்படுகிறது.

எந்த செயலையும் சிந்தனையையும் இறைவனடி சேரத் தகுதியடையும் வண்ணம் செம்மைப்படுத்துவர்கள் சமநிலை பெற்றவர் ஆவார். அவர்களுக்கு நல்வினையும் தீவினையும் ஒன்றுதான்; அவற்றின் பயனாகிய இன்பதுன்பங்களால் அவர்கள் மனம் பாதிப்படைவதில்லை. நல்வினை, தீவினை என்பனவற்றின் பால் மனிதன் கொண்டுள்ள அச்சங்கள் எல்லாம் தீர்ந்த பிறகு மனிதவாழ்வில் இருள் சேராது. இறைப்பொருளைப் புரிந்து போற்றுவர்களுக்கு, அசைவுபட்ட நிலை இருக்காது. அப்போது எது நல்வினை அல்லது தீவின என்கிற மயக்கமற்ற அறிவு உண்டாகி இருள் விலகி தெளிவுபெற்றவராவர்.

இப்பாடலிலுள்ள ;புரிந்தார்' என்ற சொல்லுக்கு தங்கினார், விரும்பினார், வணங்குகிறவர், இடைவிடாது சொல்லுவார் (ஓதுதல்) என்று பலவாறாகக் கூறப்பட்டாலும் போற்றுவார் என்று பொருள்தரும் உரை பொருத்தமானது.

பொய்மை தவிர்த்த புகழ்பாடி வழிபடுதலை இப்பாடல் வேண்டி நிற்கிறது. இறைவனின் புகழைப் புரிந்து போற்றுவோர்க்கு அவர்களுக்குச் சேரும் நன்மை தீமை எதுவும் பாதிப்பு ஏற்பபடுத்துவதில்லை என்பது இதன் கருத்து.

ஒளியுரை

குறளிசை

குறள் 4 1. இறை வணக்கம் குறள் 6
முகப்பு

குறள் 6

குறள் ௬

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

சீர் பிரிக்கப்பட்ட குறள்

பொறிவாயில் ஐந்துஆவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பதவுரை

பொறி-ஐம்பொறி-மெய்,வாய்,கண்,மூக்கு,செவி
வாயில்-வழி
ஐந்து-ஐந்து
அவித்தான்-பண்படுத்தியவன்
பொய்-மெய் அல்லாதது
தீர்-நீங்கிய
ஒழுக்க-அற
நெறி-முறை
நின்றார்-நின்றவர்
நீடு-நெடிது
வாழ்வார்-நிலைபெற்றிருப்பவர்

ஆசிரியவுரை

மணக்குடவர்

மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்? இது சாவில்லையென்றது.

காலிங்கர்

சுவை,ஒளி, ஊறு,ஓசை, நாற்றம் என்கின்ற ஐம்பொறிகளை நுகர்வதற்கு வழிக்கருவியாகிய மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என்கிற ஐம்பொறிகளையும் அகத்தடக்கியவன் இறைவனது உபதேசமுறைமையாகின்ற நல்லொழுக்கத்தின் கண் வழிப்பட்டு நின்றவர்... முத்தராவர்

பரிமேலழகர்

பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)

பரிதியார்

சத்த பரிச ரூப ரச சுத்தம் என்கிற பொறியை வழியாக உடையவற்றிற்கு மனசைப் போக்காமல் காக்க வல்லார் இகபரம் இரண்டிலும் நெறிநின்று...அநேக காலம் வாழ்வர் என்றவாறு

தேவநேயப் பாவாணர்

பொறிவாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறிகளையும் வழியாகக்கொண்ட ஐவகையாசைகளையும் விட்ட இறைவனது; பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் - மெய்யான ஒழுக்கநெறியில் ஒழுகினவர்; நீடு வாழ்வார் - வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வார்.

ஊறு, சுவை, காட்சி, மணம், இசை என்பன ஐவகை ஆசைப்புலன்கள். ஊறென்பது உடம்பால் தொட்டின்புறுதல். இறைவன் இயல்பாகவே ஆசையில்லாதவனாதலால், ஐந்தவித்தான் என்னும் பெயரும் சமணரை வயப்படுத்துமாறு சமண நெறியினின்று எடுத்தாண்டதே. ஐவரை வென்றோன் என்று இளங்கோவடிகளுங் கூறுதல் காண்க (சிலப். 10:198). ஒழுக்கநெறி இறைவனாற் சொல்லப்பட்டது அல்லது அவனுக்கு ஏற்றது.

இந்நான்கு குறளாலும், இறைவனை இடைவிடாது நினைப்பாரும் வழுத்துவாரும், அவனெறியொழுகுவாரும் வீடு பெறுவரென்பது கூறப்பட்டது.

மு.வரததாசனார்

ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

திருக்குறளார் வீ.முனிசாமி

மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து பொறிகளின் வழியாக வரும் ஆசைகளை அறுத்தவனுடைய மெய்யான ஒழுக்க வழியில் நின்றவர்கள், எக்காலத்திலும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள்.

பேரறிஞர் வ.சுப.மாணிக்கனார்

ஐம்புலனையும் அழித்தவனது மெய் நெறியைக் கடைப்பிடித்தவர் நெடுங்காலம் வாழ்வர்.

கலைஞர் மு.கருணாநிதி

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

சாலமன் பாப்பையா

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.

முனைவர் கோ. பெரியண்ணன்

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வழியாக ஏற்படும் ஆசைகளை ஒழித்த இறைவன் மெய்வழியில் நின்றவர்கள் உலகில் நெடுங்காலம் வாழ்வா்

உத்தம புத்திரர்

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கையினை அறுத்த இறைவனின் பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலைபெற்று நீடித்து வாழ்வர்.

ஓசை, ஒளி, ஊறு, சுவை, நாற்றம் என இந்திரிய வாயில்கள் மூலம் பெறும் ஐந்து அவாவினையும் அறுத்தவனின் உண்மையான ஒழுக்க நெறியினைக் கடைப் பிடிப்போர் உலகில் நீண்ட வாழ்வினைப் பெறுவர்.

பொய் தீர்த்த என்பது வெறும் உண்மையல்ல; பொய்யினைப் பரிசோதித்து வென்ற என்ற பொருள்படும். எனவே அத்தகைய உண்மையானது இயற்கையிலேயே ஆண்டவன் பால் மட்டுமே உள்ளது.

நீடு வாழ்வர் என்பது நீண்ட வாழ்வு பெற்று இன்புற்று வாழுவர் என்பது பொருள். மேலும் நீண்ட வாழ்வு என்பதற்கு சித்தர்கள் சொல்லும் மரணமிலாப் பெரு வாழ்வையும் குறிக்கும்.

கணிஞன்

கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் முந்தைய பாடல்களில் மனம், மொழிகளால் வழிபாடு செய்யும் நெறியை விளக்கிய திருவள்ளுவர், இக்குறளில் ஒழுக்கத்தின்வழி கடவுள் வணக்கம் செய்ய அறிவுறுத்துகிறார்.

இறைவனது ஒழுக்க நெறியில் நின்றவர் நெடிது வாழ்வர் என்பது இக்குறள் கூறும் கருத்து.

இக்குறளில் சொல்லப்பட்டுள்ள ஐந்தவித்தான் யார்? இறைவனது ஒழுக்க நெறி என்றால் என்ன?

ஐந்தவித்தான் என்பது பொறிகள், புலன்களில் இயக்கத்தை முறைப்படுத்தி, நெறிப்படுத்தி வாழ்ந்தவன் என்று பொருள் கொள்ளப்படும். இறைவன் சொன்ன நெறிகள் என்று சொல்லவந்த வள்ளுவர் ஐந்தவித்தான் கூறிய நெறிகள் என்று செய்யுள் படைத்ததாகச் சிலர் கூறுவர். அதாவது ஐந்தவித்தான் என்ற சொல் இறைவன் குறித்ததே என்பது இவர்கள் கருத்து. மனிதனாகப் பிறந்து ஐம்பொறிகளையும் அவற்றினால் உண்டாகும் ஐம்புலன்களையும் அவித்துக் கடவுள் நிலையை அடைந்தவர் அனைவருக்கும் இக்குறட்கருத்து பொருந்தும் என்று சொல்வர் இவர்கள். இக்குறளில் சொல்லப்பட்ட ஐந்தவித்தான் சமண சமயத் தெய்வம் ஆகும் என்பர் சிலர். ஐம்பொறியும் ஐம்புலனும் உடைய மனிதனாகப் பிறந்து மனிதனாக வளர்ந்து ஐம்பொறிகளையும் ஐம்புலன்களையும் அடக்கித் தவம் செய்து வினைகளை அறுத்துக் கடவுள் நிலையை அடைந்தவர்கள் சமண சமய நம்பிக்கையின்படி தெய்வமாகக் கருதப்படுவர். அவர்தான் அருகக் கடவுள் என்றும் தீர்த்தங்கரர் என்றும் கூறப்படுபவர். ஐம்பொறிகளையும் ஐம்புலன்களையும் பெற்றிருந்து, பிறகு தவத்தினாலே ஐம்பொறிவாயில்களை அவித்துப் பிறவித் துன்பத்தை நீக்கி வீடுபேறு பெற்ற தீர்த்தங்கரர், அருகக் கடவுள் எனப்படுவார். இவர்தான் பொறிவாயில் ஐந்தை அவித்து கடவுள் நிலையை அடைந்தவர். இவரைத்தான் இக்குறள் கூறுகிறது என்கின்றனர் சமண சமயத்தார். புத்தர் பெருமானும் மனிதனாகப் பிறந்து வளர்ந்து தம்முடைய பொறிவாயில்கள் ஐந்தையும் அவித்துப் போதி ஞானம் பெற்றுப் புத்த பதவியை அடைந்தவர்தாம். ஆகையால் ஐந்தவித்தான் என்பது புத்தரைக் குறித்தது என்பர் புத்த சமயத்தைச் சார்ந்தோர். இவ்விரண்டு விளக்கங்களும் இக்குறள் நடைஅமைப்புக்குப் பொருந்தி வருகின்றன என்றாலும் பொதுமை நூல் இயற்றிய வள்ளுவர் சமயச்சான்றோகளை தமது கடவுள் வாழ்த்தில் இறைவனாக ஏற்றிக் கூறுவார் என்பது ஏற்கத்தக்கது அல்ல.

இறைவன் என்னும்போது உருவம், அருவம், அருவுருவம் முதலிய எல்லாவற்றையுங் கடந்தவன்; அவன் பிறப்பிறப்பு இல்லாதவன் என்றே நாம் புரிந்து கொள்கிறோம். வள்ளுவரும் இப்பண்புகள் கொண்டவனையே குறட்பாக்களில் கூறுகிறார். இப்படிப்பட்ட இறைவனுக்கு பொறிகள் உண்டா? புலன்கள் உண்டா? அவனுக்குப் பொறி/புலன் இருக்க முடியாது. புலனேயில்லா ஒருவனைப் புலனை அவித்தவன் என்று எப்படிச் சொல்வது? ஐந்தவித்தான் என்பது இறைவனுக்கு ஏற்றம் தரும் சொல் அல்ல; அது எந்தவகையிலும் அவனுக்கு சிறப்பு சேர்க்காது. எனவே ஐந்தவித்தான் இறைவன் அல்ல.

ஐந்தவித்தான் இறைவன் இல்லையென்றால் இச்சொல் யாரைக் குறித்தது?

ஐந்தவித்தான் என்ற சொல்லாட்சி கடந்த காலத்தைக் குறிப்பது. இது 'அவன் ஐம்புலன்களையும் வென்றவன் என்பதாகவோ அல்லது அவை முன்பு இருந்தன; இப்போது இல்லை' என்று பொருள் கொள்ளவைக்கிறது. ஐந்தவித்தான் என்ற தொடர் ஒருமையையும், நின்றார், வாழ்வார் என்பன பலர்பாலும் உணர்த்துததால் இன்னொரு இடர்ப்பாடு நேருகிறது. 'ஐந்தவித்தான் ஆகி என ஆண்பால் எழுவாய் ஆகி என்ற வினைஎச்சத்தை ஏற்க, அங்ஙனம் அவித்த பலர் ஒழுக்கநெறி நின்றாராயின் நீடு வாழ்வார் எனச் சில சொல் வருவிதது முடிக்க இவ்விடர்ப்பாடு அகலும்' என்று தண்டபாணி தேசிகர் இலக்கண அமைதி கூறுவார்.

'ஐம்பொறிகளையும் அகத்தடக்கி இறைவனது உபதேசமாகிய ஒழுக்கநெறியில் நின்றார்' என்ற காலிங்கர் உரை இக்குறட்பொருளை விளங்கிக்கொள்ளப் பெரிதும் உதவுகிறது. இறைவன் என்றோ உபதேசம் என்றோ இக்குறளில் சொல்லாட்சி இல்லை; அவை வருவித்துத் தரப்பட்டவை. அதாவது இது கொண்டுகூட்டி உரைத்ததுதான். ஆனாலும் இவ்வுரையே இக்குறளுக்குத் திறவுகோலாக அமைகிறது. பொறியடக்கம் இறைவன் சார்ந்தது இல்லை; அவன் நெறிகளைக் கடைப்பிடிப்பாரே பொறிகளை அகத்தடக்க வேண்டியவர்கள் எனச் சொல்கிறார் காலிங்கர். இவரது 'ஐந்தவித்தான் ஆகி இறைவனது ஒழுக்கநெறியின் வழுவாது நிற்பாராயின் அவர்கள் நீடுவாழ்வார்கள்' என்ற உரை நேராகவே விரித்துரைக்கத் தேவையின்றி குறட்கருத்துக்குள் செல்கிறது. 'ஐந்தவித்தானது ஒழுக்கநெறி நின்றார்' என்று கொள்ளாமல், 'ஐந்தவித்து அதாவது ஐந்தவித்தான் ஆகி ஒழுக்கநெறி நின்றார்' என்று கொண்டால் இக்குறளின் பொருள் நன்கு விளங்கும்.

இறைவனது நெறி என்று ஒன்று உள்ளதா என்பது அடுத்து எழும் வினா. 'பொய்தீர் ஒழுக்கநெறி'யே இறைவனது நெறி என்று காலிங்கர் உரை கூறும். பொய்தீர் ஒழுக்க நெறி என்பது வழிவழியாக உபதேசமுறையான் வருவது; அதுவே நல்லொழுக்கம் பேண உதவுவது; அது தவறுகட்கு இடந்தராதது என்று பின்வந்தவர்கள் காலிங்கர் உரையை வழிமொழிந்தனர். உபதேச வாயிலாகச் சொன்ன ஒழுக்கநெறி என்பது தமிழில் அக்காலத்திலிருந்த அறம் பாடிய நூல்களில் கூறப்பட்ட நெறியைக் குறிக்கலாம். நான்குமறைகளில் சொல்லப்பட்ட ஒழுக்கமாகவும் இருக்கலாம். இராமனாக வந்து நடந்து காட்டியருளிய ஒழுக்கநெறி என்றும் கொள்ளலாம். பரமாகமம் என்ற சமணநூலில் சொல்லப்பட்ட ஒழுக்கத்தையும் அல்லது புத்தர் போதனைகளையும் கூறலாம். எது பொய்தீர் ஒழுக்க நெறியோ அதுவே இறைவன் ஓதிய ஒழுக்கநெறி.

இறைவனை நினைத்தலும் புகழ்ந்தேத்துதலும் போல, ஒழுக்கநெறி நிற்றலும் கடவுள்வாழ்த்தாகும் என்பது இக்குறள் வழங்கும் நுண்ணிய கருத்து. "கடவுள் வழிபாடு பொறி, புலன்களைப் பக்குவப் படுத்துதற்குரியது. திருவள்ளுவர், இறைநெறி சார்ந்த ஒழுக்கமாகப் பொறிவாயில் ஐந்தவித்தலையே கூறுகின்றார்" என்பார் குன்றக்குடி அடிகளார். "ஐந்தவித்தான் என்பது பேராற்றலையும் 'ஒழுக்கநெறி' என்பது ஆற்றலை நெறிப்படுத்தும் தூய்மையையும் ஒருங்கு கூட்டி நிற்ப! வினையாற்றலும் மனத்தூய்மையும் இக்குறட்கண் வள்ளுவர் உறுத்தும் பிரிவில் இறைக்கூறுகள் அல்லவா? இறைநெறியைப் பலர் உளறுமாப் போல அறிவுக்கு விளங்கா நெறியாக்காது, வாழ்வுக்குப் பின்னெறியாக்காது, அறிவுநெறியாக, வாழ்க்கைச் செயல் நெறியாக, நன்றாகக் குறிக்கொண்மின் - ஒழுக்கநெறியாகக் காண்பது வள்ளுவ இறைமை. பல்வேறு ஒழுக்கத்துள்ளும் வாய்மை நெறியாக-பொய்தீர் நெறியாகத் துணிவது இறை வள்ளுவம்" என்றார் வ சுப மாணிக்கம்.

மக்கள் ஐந்தவித்தான் (ஆகி) ஒழுக்கநெறியில் வழுவாது நிற்பாராயின் நீடுவாழ்வார் என்பது இக்குறள் கூறும் கருத்து.

ஒளியுரை

குறளிசை

குறள் 5 1. இறை வணக்கம் குறள் 7
முகப்பு

குறள் 7

குறள் ௭

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

சீர் பிரிக்கப்பட்ட குறள்

தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

பதவுரை

தனக்கு-தனக்கு
உவமை-ஒப்பு
இல்லாதான்-இல்லாதவனது
தாள்-அடி
சேர்ந்தார்க்கு-இடைவிடாது நினைந்தவர்க்கு
அல்லால்-அன்றி
மன-மனத்தின்கண்
கவலை-நிகழும் துன்பம்
மாற்றல்-நீங்குதல்
அரிது-அருமையானது

ஆசிரியருரை

மணக்குடவர்

தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது மனத்துண்டாங் கவலையை மாற்றுத லரிது. வீடுபெறலாவது அவலக்கவலைக் கையாற்றினீங்கிப் புண்ணிய பாவமென்னுமிரண்டினையுஞ் சாராமற் சாதலும் பிறத்தலுமில்லாத தொரு தன்மையை யெய்துதல். அது பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார். அதனால் எல்லாத் துன்பமும் வருமாதலின்.

காலிங்கர்

எவ்வுயிக்கும் உயிர்பொருள் ஆகின்றவனாகிய முதற்பொருளாம் தன்மைக்கு இணையில்லாதவன் தனது அடியினை உண்மையாகச் சேர்ந்தவர்க்கு அல்லது.. மற்றி யாவர்க்கும் தமது நெஞ்சத்துக் கவலை நீக்குதற்கு அரிது.

பரிமேலழகர்

தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.)

பரிதியார்

தனக்கு ஒருவரும் நிகர் இல்லாதவன் பாதத்தைச் சேராதவர். மனத்துயரம் மாற்றுவார் அல்லர். அவர் மனத்துயரம் மாற்றமாட்டார்.

தேவநேயப் பாவாணர்

தனக்கு உவமை இல்லாதான் - ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய; தாள் சேர்ந்தார்க்கல்லால் - திருவடிகளை யடைந்தார்க்கல்லாமல்; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழுந்துன்பங்களையும் அவற்றாள் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது.

இம்மைக்கும் மறுமைக்கும் உரிய எல்லாப் பொருள்களையும் நலங்களையும், எல்லார்க்கும் என்றும் வரையாதளிக்கக்கூடிய வள்ளல் இறைவன் ஒருவனேயாதலின், அவனையடைந்தார்க்கல்லது துன்பமுங் கவலையும் நீங்காவென்பதாம்.

அருமைச் சொல்லிற்குரிய சின்மை இன்மையென்னும் இரு பொருள்களுள், இங்கு வந்துள்ளது இன்மை.

மு.வரததாசனார்

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

இரா சாரங்கபாணி

எவ்வகையாலும் தனக்கு ஒப்புமை இல்லாதவனின் திருவடியை இடையறாது நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு மனக்கவலையை விலக்க முடியாது.

திருக்குறளார் வீ.முனிசாமி

தனக்கு ஈடாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாதவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங்களை நீக்க முடியாது.

பேரறிஞர் வ.சுப.மாணிக்கனார்

உவமை கடந்தவன் அடியை நினைந்தாலன்றி மனக் கவலையை மாற்ற முடியாது.

கலைஞர் மு.கருணாநிதி

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

சாலமன் பாப்பையா

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

முனைவர் கோ. பெரியண்ணன்

தனக்கு உவமையாக வேறுயாரும் இல்லாத இறைவன் திருவடிகளை சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் தம் மனத்தில் உண்டாகும் துன்பங்களை மாற்றிக் கொள்ள முடியாது.

ப. வீரராகவன்

யாருக்கு மனக்கவலை இல்லை?
கடவுளை வணங்குபவருக்கு மனக்கவலையில்லை.

உத்தம புத்திரர்

தனக்கு இணையே இலாத, பேராற்றல் மிக்க இறைவனின் பாதார விந்தங்களைச் சேர்ந்து ஒழுகுபவருக்கு அல்லாது மற்றவர்களின் மனக் கவலை, துன்பம் போன்றவற்றைக் குணப்படுத்தும் சாத்தியம் அரிது என்கிறார் வள்ளுவர்.

அதாவது இறைவனைச் சார்ந்து ஒழுகாதாருக்கு அவை இயலாது என்பது பொருள். முக்கியமாக மனக் கவலை என்று சொன்னார். மற்றைய துன்பங்கள் எல்லாவற்றுக்கும் மூல காரணமான துன்பம் மனக் கவலை என்பது நுணுக்கம்.

தங்களைக் காட்டிலும் வல்லமை பொருந்திய, ஈடற்ற, சர்வ வல்லமை பொருந்திய இறைவனின் மேல் நம்பிக்கை வைத்து ஒழுகினால், மனத் துயர் வந்தபோதும் கூட அவை தானாகவே மாறிவிடும் அல்லது குணமாகிவிடும் என்பது உட்பொருள்.

தெய்வ நம்பிக்கை மனத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடல் உபாதை தோன்றினும் குணமாகிவிடும் என்பதும் மறை பொருள்.

ஒப்பு உயர்வற்ற இறைவனின் மேல் நம்பிக்கை வைத்துத் தொழுதாலே மன நலம் பெறுவீர் என்பது திண்ணம்.

கணிஞன்

கடவுளது மனத்துயர் நீக்கும் ஆற்றல் இக்குறளில் உரைக்கப்படுகிறது.

இறைவனது திருவடியை இடைவிடாது நினைப்பவர்களால் மட்டுமே மனத்தினால் வரும் கவலைகளைப் போக்க முடியும் என்பது இக்குறள் கூறும் கருத்து.

கடவுளை நினைப்பதால் அவர்கள் மனக்கவலை எவ்விதம் நீங்கும்?

தனித்த பொருள் இறை. ஒப்பார் மிக்கார் இல்லாது, இன்ன தன்மையினது என்று உரைக்கத்தக்க உவமைகளுக்கு அப்பாற்பட்டது. கடவுளுக்கு உவமையாக எதையுமே கூறமுடியாது. அப்படிப்பட்ட கடவுளை நினைக்காதவர்களுக்கு மனக்கவலையை நீக்க இயலாது. துன்பநீக்கமும் இன்பநாட்டமும் மனிதர்கள் விரும்புவன. துன்பம் கவலையை அளிக்கும். சினம், வெறுப்பு, பொறாமை, போன்றவைகளால் விளையும் துன்பங்களுக்கு எவ்வளவோ வழிகள் சொல்லப்படுகின்றன. மற்றவழிகளை நாடுவதலாலோ, மற்றவர்களாலோ மனிதனின் மனவலியை முழுதாகப் போக்க முடியாது. உருவமற்ற எல்லாம் வல்ல கடவுளைச் சிந்திப்பதே கவலை நீக்கத்திற்கு வழி. கடவுளது திருவடிகளைச் சேர நினைக்கும் போதே, மனம் ஒரு பண்பட்ட நிலையை கடக்கிறது; அது மேலும் உயர்ந்து, மனக்கவலை இன்மை என்னும் நிலையை அடைகிறது. அந்த நிலையில் துன்பமும் அதன் விளைவான கவலையும் மறைந்துவிடும்.

முதற்குறளில் கடவுளுக்கு அகரத்தை உவமையாகத் தந்த வள்ளுவர் இங்கு இறைவனை எவ்வகையிலும் தனக்கு உவமையில்லாதான் என்று கூறுவது முரண் ஆகாதா என்ற வினா எழுவது இயல்பு. முத்ற்குறளில் 'காட்சிப் பொருளையே கருத்துப் பொருளுக்கு உவமை கொடுத்தவாறு உபசாரத்தால் என்க' என்று இதற்கு விளக்கம் சொல்லி அது முரணாகா என்று சொல்வார் தண்டபாணி தேசிகர். (உபசார வழக்கு - ஒன்றின் தன்மையை மற்றொன்றின் மீது ஏற்றிச் சொல்லுவது)

தாள்சேர்ந்தார் (அடி சேர்ந்தார்) என்ற தொடர்க்கு தண்டபாணி தேசிகர் குறிப்பு சிறப்பானது: 'இவ்வதிகாரத்து (கடவுள் வாழ்தது), 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்'.

ஒப்புமை இல்லாத ஒருவனேயாகிய, எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்துள்ள, இறைவனின் மேல் நம்பிக்கை வைத்து ஒழுகினால், மனத் துயர் வந்தபோதும் கூட அவை தானாகவே மாறிவிடும் அல்லது குணமாகிவிடும் என்பது பொருள்; தெய்வ நம்பிக்கை மனத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுகின்றது; மனம் தூய்மையாக இருந்தால் கவலைகள் பறந்துபோகும் என்பது நுண்பொருள்.

ஒளியுரை

குறளிசை

குறள் 6 1. இறை வணக்கம் குறள் 8
முகப்பு

குறள் 8

குறள் ௮

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

சீர் பிரிக்கப்பட்ட குறள்

அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது

பதவுரை

அற-அறமாகிய
ஆழி-கடல்
அந்தணன்-இறைவன்
தாள்-அடி
சேர்ந்தார்க்கு-இடைவிடாது நினைந்தவர்க்கு
அல்லால்-அன்றி
பிற-பிறவாகிய
ஆழி-கடல்
நீந்தல்-நீந்தல்
அரிது-உண்டாகாது

ஆசிரியருரை

மணக்குடவர்

அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.

காலிங்கர்

அறமாகிய பெருவெள்ளமான அனைத்துயிர்கட்கும் தண்ணளியை உடையனாகிய இறைவனது தாளினை வணங்கி வழிபட்டார்க்கல்லது... மற்று(றி) யாவர்க்கும் பிறவி பௌவத்தைக் கடத்தல் அரிது. (பௌவம்-கடல்)

பரிமேலழகர்

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)

பரிதியார்

தன்மம் என்னும் சமுத்திரமாக உள்ள பரமேசுரன் பாதந்துணை இல்லாதவர் பாவக்கடலை நீந்தமாட்டார்

தேவநேயப் பாவாணர்

அறவாழி அந்தணன் - அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனுமாகிய இறைவனது; தாள் சேர்ந்தார்க் கல்லால் - திருவடியாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது - அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும்.

எல்லா அறங்களுந் தொக்கதொகுதி கடல்போற் பரந்ததாதலின், இறைவனை அறவாழியென்றார். பொருளின்பங்களைக் கடலாக வுருவகித்தமையால், அவற்றொடு தொடர்புள்ள அறவாழி என்பது அறக்கடலையன்றிப் புத்தனது தரும சக்கரத்தை யுணர்த்தாது, பிறவாழி கடவாமையாவது பொருளின்ப ஆசையுள் மூழ்கித் துன்புறுதல். இறைவனடி சேர்ந்தவர் அத்துன்பத்தினின்று நீங்கி என்றென்றும் பேரின்பத்தில் திளைப்பர் என்பதாம்.

அறம் பொருளின்பத்தை ஆழியென்றுருவகித்து இறைவன் திருவடியைப் புணையென்றுருவகியாது விட்டது, ஒருமருங்குருவகம்.

மு.வரததாசனார்

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.

திருக்குறளார் வீ.முனிசாமி

அறக்கடலாகிய இறைவனுடைய அடிகளாகிய தெப்பத்தினை சார்ந்தவர்க்கு அல்லாமல், மற்றவர்களுக்கு பொருள், இன்பம் ஆகிய கடல்களை நீந்திக் கடத்தல் முடியாததாகும்.

பேரறிஞர் வ.சுப.மாணிக்கனார்

அறக்கடலாம் அருளாளன் அடியை நினைந்தாலன்றிப் பாவக் கடலைக் கடக்க முடியாது.

கலைஞர் மு.கருணாநிதி

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால்,அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி,மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

சாலமன் பாப்பையா

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

முனைவர் கோ. பெரியண்ணன்

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளை நினைப்பவர்களைத் தவிர மற்றவர்கள் பொருள், இன்பம் ஆகிய வேறு கடல்களைக் கடக்க மாட்டார்கள்.

ப. வீரராகவன்

யாருக்குப் பேராசை இல்லை?
கடவுளின் பாதங்களை சேர்ந்தார்க்குப் பேராசை இல்லை.

உத்தம புத்திரர்

அறக்கடலாகிய அகத்தே குளிருடைய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்து ஒழுகுபவரைத் தவிர மற்றவர்கள் மற்றைய கடல்களாகிய பொருட் கடலையும், இன்ப சாகரத்தையும் கடக்க இயலாது.

அறம், பொருள், இன்பம் எனும் கடல்களைக் கடப்பதே மனித வாழ்வின் நோக்கம். எனவே அறமாகிய முதற் கடலினைத் தாண்டாது மற்றவற்றை கடக்க இயலாது என்பது பொருள், இதானால் அறம் என்பது இம்மூன்றுள் தலையானது என்பது நுணுக்கம்.

எனவே அத்தகைய அறம் எனும் பெருங்கடலை இறைவனாக்கி வள்ளுவர் அதையும் அகத்தே தண்ணளியனாக்கி, வேய்ங்கடந்தோனாக்கி அவர்தம் பாதங்களைப் பணிந்து ஒழுகாதவர்களுக்கு மற்றைய கடல்களைக் கடக்க இயலாது என்று தெளிவு செய்கிறார். அதில் ஈண்டு பெறுவது முதலில் அறக்கடலெனும் இறைவனின் திருவடிகளைப் பணிந்து ஒழுகி அதைக் கடக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களே மற்றைய கடல்களைக் கடக்க இயலும் என்பதே.

இதில் அறத்தின் முக்கியத்துவம் மட்டுமன்றி, எதிலும் ஒரு வரிசைக்கிரமமாக வெற்றி பெற வேண்டும் என்பதும் மறை பொருள்.

அந்தணன் என்பது பொருட்பற்றோ, காமத்துப்பற்றோ அன்றி அறத்தை மட்டுமே ஒழுகி எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டோன் என பின்னர் நீத்தார் பெருமையில் விளக்கம் தருவதைப் புரிந்து கொண்டால், அத்தகைய தன்மை கொண்ட அருட் கடலாகிய இறைவனை என்பது விளங்கும்.

கணிஞன்

பாவக்கடலைக் கடக்கும் வழி சொல்லும் குறள் இது.

அறவாழியான கடவுளின் அடியை நினைந்தவர் மட்டுமே பிறவாழியான பாவக்கடலைக் கடப்பர் என்பது இக்குறள் கூறும் கருத்து. அறவாழி, பிறவாழி என்பன யாவை?

அறவாழி அந்தணன் என்பதற்கு அறக்கடலாகிய கடவுள் என்றும் அறச்சக்கரத்தையுடைய கடவுள் என்றும் இரண்டு வகையில் நேரடிப் பொருள் கொள்ளமுடியும். மயிலை சீனி வேங்கடசாமி அறவாழி அந்தணன் என்றது புத்தரையோ அல்லது சமணரது அருகனையோ குறிப்பிடலாம் என்கிறார். புத்தர் போதித்த அறநெறியை 'தரும சக்கரம்'(அறவாழி) என்று பௌத்த சமய நூல்கள் கூறுகின்றன. அவர் கண்ட தத்துவத்திற்குத் 'தர்ம சக்கரப் பிரவர்த்தன சூக்தம்' என்பது பெயர். புத்தரைப் பின்பற்றியவர்கள் முன்னாளில் புத்தருக்கு உருவம் அமைத்து வழிபடவில்லை. அவர்கள் பாதபீடிகை, தர்ம பீடிகை என்னும் இரண்டையும புத்த உருவத்துக்குப் பதிலாக வைத்து வணங்கினார்கள். தர்மபீடிகை (தர்மசக்கரம்) என்பது அறவாழி. புத்தருடைய போதனையை அறவாழியாக அமைத்து அவர்கள் வணங்கினார்கள். 'அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டிக் காமற்கடந்த வாமன்' என்றும் 'ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன்' என்றும் புத்தர் பெருமானை மணிமேகலை காவியம் பாடிற்று. புத்தர் அறவாழியுருட்டினவர் (அறநெறியைப் போதித்தவர்), அறவாழி என்னும் தரும சக்கரத்தால் எல்லா உயிர்களையும் ஆள்கின்றார் என்பது பொருள். மேலும் அறவாழி அந்தணன் என்பது பகவான் புத்தரைக் குறிப்பது போலவே, அருகக் கடவுளையும் காட்டுகிறது என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி. அருகப் பெருமானும் அறவாழியை (தரும சக்கரத்தை) யுடையவர்; அவருடைய அறநெறி அறவாழி என்று கூறப்படுகிறது; சமணர் இன்றும் தங்களுடைய கோயில்களில் தரும சக்கரத்தை வைத்து வணங்குகிறார்கள்; அருகர் (தீர்த்தங்கரர்) எழுந்தருளும்போது அவருக்கு முன்னால் அறவாழி செல்கிறது என்பது சமணரின் நம்பிக்கை; உரையாசிரியராகிய பரிமேலழகர் இக்கருத்தையுட்கொண்டே தம்முடைய உரையில் 'அறவாழியென்பதனைத் தருமச்சக்கரமாக்கி அதனுடைய அந்தணரென்று உரைப்பாருமுளர்' என்று எழுதியுள்ளார் என்று மயிலையார் கூறுகிறார். அடுத்து, அறவாழி என்பது திருமால் ஏந்தியுள்ள சுதர்சனம் என்னும் சக்கரப்படையைக் குறிப்பது என்று வைணவர்கள் கருதுகின்றனர்.

இங்கு குறிக்கப்பட்டுள்ள அறவாழி அறச்சக்கரமல்ல என்றும் அருகன் இப்பாடலில் சொல்லப்படவில்லை என்றும் தில்லைநாத நாவலர் மறுத்துரைக்கிறார். அவர் கூறுவது:'அருகனுக்கு அறவாழி வேந்தன் என்பதே பெயர்; அறவாழியந்தணன் என்பது அல்ல; வேந்தனுக்கும் அந்தணனுக்கும் தம்முள் வேற்றுமை பெரியது; அறவாழி வேந்தன் என்பது தரும சக்கரத்தையுடையவரசன் என்னும் பொருள் தரும்; சக்கரம் வேந்தனுக்கன்றி அந்தணனுக்கு இயைதல் சிறப்பன்று; அறவாழியைத் தரும சக்கரம் எனக் கொண்டால், சக்கரத்தைக் கொண்டு கடலைக் கடப்பது எப்படி? அக்கடலை நீந்திக் கடக்க வேண்டுமென்பதற்காகத்தான் வள்ளுவர் நீந்தல் அரிது என்றார். இங்ஙனமாதலின் அருகனுக்கும் அறவாழி அந்தணனுக்கும் வெகுதுரம் என்க.' இதே வாதத்தின் அடிப்படையிலேயே அறவாழி அந்தணன் புத்தரும் அல்ல என்பதும் தெளிவு. திருமால் ஏந்தியுள்ள சக்கரப்படையை மறவாழி, சுடராழி, கொலையாழி, எரியாழி என்றெல்லாம் ஆழ்வார்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பாடிச்சென்றதால் அது அறவாழி ஆகாது என்பர்.

குறளில் வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், பொருள்சேர் இறைவன், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் எனப் பலபட இறைவனின் பண்புகள்தாம் பேசப்படுகின்றன. கடவுள் உருவமோ அமைப்போ அவனுடைய ஆயுதமோ எங்கும் கூறப்படவில்லை. உலகப் பொதுமையைப் போற்றிய வள்ளுவர் குறளில் எங்கேயும் கடவுளின் உருவ அமைப்பினைக் கூறவில்லை. அப்படி இருக்க இக்குறளைக் கொண்டு, இறைவன் தரும சக்கரத்தையுடையவன் என்று கூறுவது அவரது பொதுமையுணர்வுக்கு மாறாக அமையும். சமயக்கணக்கர் வழி நடக்காத வள்ளுவரை ஒரு சமயத்தினராக்குதல் முற்றிலும் ஒவ்வாது. எனவே இப்பாடலிலுள்ள் அறவாழி அறச்சக்கரத்தைக் குறிக்கவில்லை, அறக் கடலாகிய இறைவன் என்பதே அறவாழி அந்தணனுக்குப் பொருள்.

அந்தணன் என்றால் அந்தண்மை பூண்டவன் அதாவது குளிர்ச்சி பொருந்தியவன் என்பது பொதுவான பொருள். குறளில் அந்தணன் என்ற சொல் மூவிதப் பொருளில் ஆளப்பட்டுள்ளது. இப்பாடலில் அந்தணன் என்ற சொல்லை கடவுள் என்ற பொருளில் வள்ளுவர் கையாண்டுள்ளார். அறவோர், இறைநூல் செய்வோர் என்பன மற்ற இருவிடங்கள். அறவாழி எப்படி அறச்சக்கரத்தைக் குறிக்காதோ அதுபோல அந்தணன் என்ற சொல்லும் எந்தச் சமயத் தெய்வத்தையும் சுட்டவில்லை.

தாள்சேர்ந்தார் என்ற தொடர்க்கு தண்டபாணி தேசிகர் குறிப்பு இங்கு நினைக்கத்தக்கது: 'இவ்வதிகாரத்து (கடவுள் வாழ்தது), 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்'. இவ்விளக்கம் வள்ளுவர் தம் நூலில் சமயம் புகுந்துவிடக்கூடாது என்பதில் எவ்வாறு கருத்தூன்றி இருந்தார் என்பதையும் தெளிய வைக்கிறது.

ஈற்றடியில் நீந்தல் என்ற சொல் சார்ந்து வருவதால் பிற ஆழியிலுளள ஆழிக்குக் கடல் என்றே அனைவரும் பொருளுரைத்தனர். பிற என்பதை அறத்திற்கு எதிரானது எனக் கருதி, பொருளின்பக்கடல், துன்பக்கடல், மறக்கடல், பிறவிக்கடல் என்று விளக்கினர். பொருளும் இன்பமும் அறத்தான் வருவன; அறத்திற்கு உதவுவன. எனவே இவை துய்த்தற்குரியனவேயன்றித் துறத்தற்குரியவாகா என்று பொருளின்பக் கடல் பாவம் குறிக்கும் என்ற உரையை மறுப்பார் இரா சாரங்கபாணி. ஆனால் மணக்குடவர், பரிப்பெருமாள், மற்றும் பரிமேலழகர் உரைகளில் கண்டுள்ளபடி காமமும் பொருளும் பற்றி வரும் பாவக்கடல் என்று கொள்வதில் தடை ஏதும் இல்லை என்று தோன்றுகிறது. துன்பக்கடல் என்று பொருள் கொண்டோர் 'பிறவாழி கடவாமையாவது பொருளின்ப ஆசையுள் மூழ்கித் துன்புறுதல் 'என்று விளக்கினர். 'பொருளாலும் இன்பத்தாலும் வரும் பற்றினையுடைய கடல்' என்றபடியான ஓர் உரையும் பிறவாழிக்கு உள்ளது. 'மறங்கள் பலதிறத்தன வாகலான் 'பிற ஆழி' என்றார்' என்பது வ உ சி-யின் உரை. கடவுள் வாழ்த்து அதிகாரத்து இறுதிக்குறளில் 'பிறவிப் பெருங் கடல் நீந்துவர்' என்று தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளதால், இங்குள்ள பிற ஆழியைப் 'பிறவியாகிய கடல்' என்று கொண்டால், அது கூறியது கூறலான குற்றமுடையதாய் முடியும். எனவே பிறவிக்கடல் என்ற கருத்து இக்குறளுக்குப் பொருந்தாது.

இறைவனது 'பாதந்துணை இல்லாதவர் பாவக்கடலை நீந்தமாட்டார்' என்ற பரிதி உரை இக்குறளுக்குப் பொருந்த அமைகிறது. 'அறமாகிய பெருவெள்ளமான அனைத்துயிர்கட்கும் தண்ணளியை உடையனாகிய இறைவன்' என்று விரித்த காலிங்கர் கடவுளின் அருளைக் கடலின் எல்லையற்ற வடிவை மட்டும் கருதாமல். பெருவெKள்ளம் எனப் பொருள் கொண்டு வெள்ளநீர் வெம்மை நீக்கிக் குளிர்ச்சியைத் தருவது போல கடவுளின் கருணையை நன்கு விளக்கம் செய்தார். தீச்செயல் புரிந்தோர் எவர் கருணை வடிவான இறைவனிடம் அடைக்கலம் அடைகிறாரோ அவரே அக்குற்றத்திலிருந்து உய்வு எய்துவர்; இறைவன் திருவடியைப் பற்றுக் கோடாகக் கொள்ளாத, பாவக்கடலில் சிக்கிய மற்றவர் யாருமே மீட்சி காண முடியாது என்பதை எதிர்மறையாக "தாள் சேராதார் பாவக்கடலை கடக்க முடியாது" என்கிறது இச்செய்யுள்.

"...நீதி இறைவனால் கற்பிக்கப்ப்பட்டது. அறத்தினின்றும் பிறழ்தல் இறைவனுக்கு மாறாகச் செய்யப்படும் பாவமாகும். செய்த தவற்றுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டுவோரைக் கடவுள் மன்னித்தல் கூடும். அவர்கள் தீமையைவிட்டு விலகி நல்வழியில் நடப்பதற்கேற்ற நல்லுணர்வைக் கடவுள் அவர்கட்கு அளித்தலும் கூடும். மக்கட்கு நீதியை, நல்வழியைக் காட்ட வல்லவர் கடவுளே. மக்கள் தாமே உணராத வகையில் அவர்கள் உள்ளத்தின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் குற்றங்களையும் கடவுள் உணர்கிறார். அவரைப் பணிந்து வேண்டிக் கொண்டால் நாம் அறியாத குற்றங்களையும் அவர் அறிந்து நீக்குவார் என்பது போன்ற கருத்துக்கள்..திருக்குறளில் இல்லை. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது என்ற ஒரு குறளே அறத்தின்வழி நடப்பதற்கு இறைவன் துணை வேண்டும் என்னும் கருத்தை ஓரளவு தருகிறது எனலாம்" - இக்குறள் பற்றிய காமாட்சி சீனிவாசனின் இந்தக் குறிப்புரை இப்பாடலின் சிறப்புத்தன்மையைச் சொல்லும்.

ஒளியுரை

குறளிசை

குறள் 7 1. இறை வணக்கம் குறள் 9
முகப்பு

குறள் 9

குறள் ௯

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

சீர் பிரிக்கப்பட்ட குறள்

கோள்இல் பொறியின் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

பதவுரை

கோள்-கொள்ளுதல்
இல்-இல்லாத
பொறியின்-பொறிபோல
குணம்-நற்பண்பு
இல-உடைய அல்ல
எண்-எண்ணப்பட்ட
குணத்தான்-குணங்களையுடையவன்
தாளை-அடிகளை
வணங்கா-பணியாத
தலை-தலை

ஆசிரியருரை

மணக்குடவர்

அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்

காலிங்கர்

கோட்பரமில்லாத பொறியினைப் போலக் குணமில்லனவாம். (கோட்பரம் - கொள்கை நோக்கு) எண்ணப்பட்ட குணங்களை உடைய இறைவனது தாளினை வணங்கப்பெறாத தலைகள் என்றவாறு.

பரிப்பெருமாள்

குணமில்லை என்றது பயனில்லை என்றவாறு இது வணங்காதார்க்கு உளதாகும் குற்றம் கூறிற்று. இவை எல்லாம் தலைமை பற்றிக் கூறியவாறு கண்டுகொள்க.

பரிமேலழகர்

கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா'வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)

பரிதியார்

கோளாகிய நவக்கிரகங்களும், பலனாகிய கண், வாய், மூக்கு, செவி, மெய் என்னும் ஐம்புலன்களும் உண்டாகிலும் பயனில்லை. [இவர் குறிப்பிடும் நவக்கிரகங்கள்: ஞாயிறு, திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி,ராகு, கேது.] எட்டுக்குணங்களை உடைய சிவன் சிவந்ததாளை வணங்காத தலை. எட்டுக்குணங்களாவன: அனந்தஞானம், அனந்த வீரியம், அனந்த குணம், அனந்த தெரிசனம், நாமமின்மை, கோத்திரமின்மை, அவாவின்மை, அழியாயியல்பு என்பன.

தேவநேயப் பாவாணர்

எண் குணத்தான் - எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின்; தாளை வணங்காத் தலை - திருவடிகளை வணங்காத தலைகள்; கோளில் பொறியின் - தத்தம் புலன்களைக் கொள்ளாத பொறிகளைப்போல; குணம் இல - பயன் படாதனவாம்.

எண் குணங்களாவன தன்வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, கட்டின்மை, பேரருள், எல்லாம் வன்மை, வரம்பிலின்பம் என்பன. தாளை வணங்காத் தலையென்று தலையையே விதந்தோதினாரெனினும், வழுத்தாநாவும், புகழ்கேளாச் செவியும் அங்ஙனமே பயனில்லாதனவென்று கொள்க. குணமிலவே என்னும் பன்மை வினைகொண்டு முடிதலால், தலை என்பது பன்மை குறித்துவந்த பால் பகாவஃறிண்ணைப் பெயர். இறைவனுக்கு உடம்பில்லாவிடினும், அவன் என்றேனும் ஒருவடிவுகொள்ளின் அதன் அடியும் முடியும் ஒரு நிகரவாகவே தூய்மையாயிருப்பினும், அவனை வணங்கும் மக்களின் பணிவியலை மிகுத்துக்காட்டற்கே, திருவடி தொழுதல் அல்லது வணங்குதல் என்று கூறுவது மரபாகும்.

இறைவன் வழிபாட்டிற்குப் பயன்படுவதே மாந்தன் உடம்பின் தலையாய பயன் என்பது இக்குறட் கருத்து.

மு.வரததாசனார்

கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

திருக்குறளார் வீ.முனிசாமி

தத்தமக்குரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்போறிகளைப் போல அறிந்துனர்வதற்குரிய எளிமையான குணங்களையுடைய இறைவனுடைய தாள்களை வணங்காத் தலைகளும் பயன்படுத்தலுடையான அல்லவாம்.

பேரறிஞர் வ.சுப.மாணிக்கனார்

எண்குணம் உடையவன் அடியை வணங்காத் தலை - பாராத கண், கேளாத செவி போலப் பயன் அற்றது.

கலைஞர் மு.கருணாநிதி

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

சாலமன் பாப்பையா

எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

முனைவர் கோ. பெரியண்ணன்

எண்ணிப் போற்றும் நற்குணங்களை உடையவன் இறைவன் திருவடிகளை வணங்காத தலைகள், உணர்வில்லா மெய், பேசாத வாய், காணாத கண், முகராத மூக்கு, கேளாத செவி, போலப் பயனற்றவையாகும்.

ப. வீரராகவன்

தலையைப் பெற்ற பயன் என்ன?
கடவுளை வணங்குதலே தலையைப் பெற்றதன் முக்கியப் பயன்.

உத்தம புத்திரர்

இயங்கு கோள் அற்ற பொறிகளினால் பயன் இராதே; அதைப் போன்றே எட்டுக் குணங்களைக் கொண்ட இறைவனின் தாளை வணங்கி ஒழுகாத தலையும் பயன் தராது.

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளில் குறைபாடு இருப்பின் அவற்றால் பயன் இராது. அதைப்போன்றே இறைவனைச் சிந்தியாத, வணங்கி ஒழுகாத தலையினாலும் பயன் இராது. இதில் தலை என்பதற்கு தலைமை என்றும், சிந்திக்கும் சக்தி என்றும், தலை எனும் உடலின் முக்கிய அங்க உறுப்பையும் பொருள் கொள்ளலாம்.

உடலுக்குத் தலையானது தலை, எனவேதான் அதைத் தமிழில் தலை என்றார்கள். அத்தகைய தலையே இறைவனை ஒழுகாவிடின் பயனற்றது என்ற வள்ளுவரின் நயம் அறிவீர்களாக.

எண் குணத்தான் என்பதற்குச் சுலபமாக அதாவாது எளிதாக எண்ணிக்கையற்ற, ஒப்பற்ற பண்புகளைக் கொண்டவன் என்றுச் சொல்லலாம். ஆயின் எட்டு வகையான குணங்களை இறைவனுக்கான அடிப்படைக் குணங்களாக அன்றைய எல்லா மதங்களிலும் கூறப்பட்டிருப்பதால் அதையே திருவள்ளுவரும் குறிப்பிடுகிறார் என்றே கொள்ள வேண்டும்.

இறைவனின் எண் குணங்கள்: 1. தன்வயத்தன் ஆதல் 2. தூய உடம்பினன் ஆதல் 3. இயற்கை அறிவு, உணர்வினன் ஆதல் 4.முற்றும் உணர்தல் 5. இயல்பாகவே பாசங்கள் நீங்குதல் 6. பேரருள் உடைமை 7.முடிவிலா ஆற்றல் உடைமை 8.வரம்பு இல் இன்பம் உடைமை.

(தன்வயத்தன், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, கட்டின்மை, பேரருள், எல்லாம்வன்மை, வரம்பிலின்பம்)

கணிஞன்

இறைவனை வணங்காதவர்கள் புலன் உணர்வற்ற பொம்மைகள் போல உடலிருந்தும் உயிர் அற்றவர்களாம்.

கோளில் பொறியின் எண்குணத்தான் கடவுளது தாளை வணங்காத தலை பயனற்றது என்பது இக்குறள் கூறவரும் கருத்து. கோளில் பொறியின் என்றால் என்ன? எதனால் எண்குணத்தான் என்ற பெயர்? உருவமில்லா இறைவனை வணங்குவது எப்படி?

'கோளில் பொறியின்' என்பது இரண்டு வகையாக விளக்கப்படுகிறது. ஒன்று அறிவில்லாத பொம்மை அல்லது பதுமை என்பது. மற்றொன்று புலன் உணர்வு அற்ற பொறிகள் அதாவது ஐம்பொறிகள். கோளில் என்பதற்குக் கொள்ளுதல் இல்லாத அல்லது கொள்கை இல்லாத என்பது நேர் பொருள். மணக்குடவர் இதற்கு அறிவில்லாத என்று தனது உரையில் கூறினார். பொறி என்ற சொல் உடல் உறுப்புக்களையும் குறிக்கும் பாவை (பொம்மை) என்பதையும் குறிக்கும். பொறி மாந்தர்க்கும் உண்டு; பாவைக்கும் உண்டு. பொறியின் என்பது பொறிபோல என்ற பொருள் தரும். எனவே 'கோளில் பொறியின்' என்பது புலனற்ற பொம்மை போல அல்லது புலனற்ற உடல்உறுப்பு போல என்று பொருள்படும். புலனற்ற உடல்உறுப்பு போல என்பது இங்கு பொருத்தமானதாகும்.

எண்குணத்தான் என்றது சமணக் கடவுள் என்று சிலரும் சைவ சமயக் கடவுளான சிவன் என்று வேறு சிலரும் கூறுவர். பரிமேலழகர் முதலில் எட்டுக் குணங்களைக் கூறி அவை 'சைவாகமத்துக் கூறப்பட்டது' என்றும் சொல்கிறார். இவரே அடுத்து மற்றவர்கள் உரைப்பதாக 'அணிமா'வை முதலாக உடையதானதும், 'கடை இலா அறிவை' முதலாக உடையதானதுமான மற்ற இரண்டு வேறு வேறு எட்டுக்குணங்களைக் கூறுகிறார். அணிமாவை முதலாக உள்ள எட்டு: அணிமா, மகிமா, கரிமா, லகிமா, ப்ராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம். இவை அட்டமாசித்தி என்று அறியப்படும். அவற்றின் விளக்கங்கள்: 1.அணிமா: நுண்மை, அணுத்தன்மை. அணுவினும் மிக நுண்ணிய வடிவு பெறல். சிறிதாதல். 2.மகிமா: பருமை. மேருவினும் பேருருப் பெற்று நிற்றல். பெரிதாதல். 3.லகிமா: மென்மை. சேறு முதலியவற்றில் இயங்கினும் அழுத்திலின்றிக் காற்றினும் மெல்லிய வடிவுற்று நிற்றல். இலேசாகுதல். 4.பிராத்தி: விரும்பியதெய்தல். மனத்தால் விழையப்பட்டன அனைத்தும் விழைந்தவாறே பெறுதல். எல்லாவற்றையும் ஆளுதல். 5.கரிமா: விண்டன்மை. புலன்களை நுகர்ந்தும் அவற்றில் தொடக்குண்ணாமை. பொன் போலப் பளுவாதல். 6.வசித்துவம்: கவர்ச்சி. உலகனைத்தையும் தன் வயமாக்கல். எல்லாரையும் தன் வசப்படுத்துதல். 7.பிரகாமியம்: நிறைவுண்மை. கூடுவிட்டுக் கூடுபாய்தல். 8.ஈசத்துவம்: ஆட்சியனாதல். பிரமன் முதலியோர் மாட்டும் தன் ஆணை செலுத்தி நிற்றல். அனுபவித்தல். கடை இலா அறிவை முதலாக உடைய எட்டு ஆவன: கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுள் இன்மை, அழியா இயல்பு என்பன. இவை சமண சமயத்தார் கூறும் கடவுளின் எண்குணங்கள். அவற்றின் விளக்கங்கள்: 1. முற்றுமுணர்தல் (எல்லையற்ற ஞானம்) 2. முடிவிலா ஆற்றல் 3. எல்லையற்ற பார்வை 4. எல்லையற்ற ஒழுங்கு 5. அழியா இயல்பு 6. சார்பின்மை 7.பற்றின்மை 8.அருவத்தன்மை (உருவிலி) பரிதி உரையில் காணும் சைவ சமயக் கடவுளான சிவனுக்குரிய எட்டுக் குணங்களும், சைவாகமத்துள் கூறப்பட்டதாக பரிமேலழகர் சொல்லும் எட்டுக்குணங்களும் வேறுவேறாக உள்ளன. இதன் காரணம் அறியப்படவில்லை. குறளுக்குச் சைவ சமய சார்பு கொண்டு உரை எழுதியதாகக் கருதப்படும் பரிதி கூறும் எட்டுக்குணங்களும் சமணசமயத்தில் கண்டுள்ள எண்குணங்களை ஒட்டிவருகின்றன என்பது வியப்பளிக்கிறது. பரிமேலழகர் சுட்டும் சைவ சமய ஆகமம் எது என்பதும் தெரியவில்லை. காலத்தால் குறளுக்கு மிகவும் பின்பட்ட தேவாரம்தான் முதன்முதலில் சிவனை எண்குணத்தான் என்று கூறுகிறது; அதற்குமுன் சிவனை இவ்வடை கொண்டு யாரும் குறிப்பிடவில்லை; எனவே இக்குறள் குறிப்பிடுவது சமணக் கடவுளே என்பது சமணர்கள் வாதம்.

எண்குணத்தான் என்பதற்கு எட்டுக்குணங்கள் தவிர்த்த வேறு பொருள் கொள்வோரும் உண்டு. எண்குணத்தான் என்பது 'எளிமைக் குணமுடையவன்' என்று பொருள்படும் என்பர் சிலர். இவர்கள்: எண்பொருள வாகச் செலச்சொல்லி (குறள் 424)(பொருள்: எளிய பொருள் ஆகுமாறு மனம்கொளச் சொல்லி)); எண்பதத்தால் ஒரா முறைசெய்யா மன்னவன் (குறள் 548) (பொருள்: எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன் )); எண்பதத்தால் எய்தல் எளிதென்ப(குறள் 991)(பொருள்: எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளியது என்று கூறுவர்)) ஆகிய குறட்பாக்களைச் சான்றாக மேற்கோள் காட்டுவர். அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடைய இறைவன் என்பர் இவர்கள். எண்குணத்தான் என்பதற்குக் காலிங்கர் 'எண்ணப்பட்ட குணங்களை உடைய இறைவனைக் குறிக்கும் என்கிறார். இது பிற பழைய உரையாசிரியர்களின் உரைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அன்பர்கள் எண்ணும் குணங்களையுடயவன் என்று பொருள் அமையும். இறைவன் குணவடிவினன்; மாந்தர்கள் இறைவனது பெருமைகளை எண்ணி எண்ணி முயன்று அக்குணங்களைப் பெறவேண்டும் என்பது கூறப்பட்டது என்றும் இவ்வுரையை விளக்குவர்.

எண்குணத்தான் என்பது இறைவனைக் குறிப்பது என்பது அனைவரும் ஒத்த கருத்தாகும். ஆனால் எட்டுக்குணங்கள் கொண்ட இறைவன் என்று பொருள் கொள்வது சரியா? இறைவனுக்கு எண்ணி எட்டே எட்டு குணங்கள்தானா? எட்டுக் குணங்கள் கொண்டவன் என்று கடவுளை எப்படி வரையறுக்க முடியும்? இறைவன் எண்ணுதற்கரிய குணங்களை உடையவன் அல்லவா? சமயக் கடவுளரை வள்ளுவர் குறளில் எங்கும் கூறவில்லை என்பது திண்ணம். இப்பாடலிலும் சமயமோ சமயக் கடவுளோ இல்லை. எனவே அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடைய இறைவன் என்றோ அல்லது எண்ணும் குணங்களையுடயவன் என்று கொள்வதே பொருத்தமாகும்.

இப்பாடலிலுள்ள தாள் இறைவன் திருவடியைக் குறிக்கும். இவ்வேளையில் 'தாள்' பற்றிய தண்டபாணி தேசிகர் குறிப்பு இங்கு நினைக்கத்தக்கது: 'இவ்வதிகாரத்து (கடவுள் வாழ்தது), 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்'. இவ்விளக்கம் வள்ளுவர் தம் நூலில் சமயம் புகுந்துவிடக்கூடாது என்பதில் எவ்வாறு கருத்தூன்றி இருந்தார் என்பதையும் தெளிய வைக்கிறது.

'வணங்கா தலை' குறிப்பது என்ன? 'வணங்கா' என்பது வணங்காத, வளையாத, பணியாத என்றவாறு பொருள்படும். திரு வி க வணக்கம் என்பது வளைவு என்று சொல்லி, ' என்ன வளைவு? முனைப்பின் வளைவு; முனைப்பறுதல். முனைப்பற்ற இடத்தில் தாழ்மை தானே அரும்பும்; "நான்" என்னும் முனைப்பு வளைந்தால் கருவி கரணவுறுப்புகள் எல்லாம் தாமே வளையும்; முனைப்பற்ற வணக்கமே வணக்கமாகும். முனைப்பறாத வெறும் புறவணக்கம் வணக்கமாகாது; எண்குணத்தான் தாளை வணங்க வணங்கச் செருக்கு அற்று அற்று முறைமுறையே எண்குணம் படியும். எண்குணத்தில் மூழ்குவது இறைவனடியில் இன்புற்று வாழவதாகும்' என்று விளக்குவார்.

"தாளை வணங்காத தலை' என்பதிலுள்ள தலையைச் சினைப் பெயராகக் கொள்ளாமல் இடப்பொருளாகக் கருதி "தாளை வணங்காவிடத்து" என்றும் உரை கண்டனர். ஆனால் இது இலக்கணமுறைப்படி தவறு என்று இரா சாரங்கபாணி சுட்டிக் காட்டுகிறார்: " 'வணங்காத தலை' என்புழித் தலை என்பதற்கு இடப்பொருள் கொண்டு 'வணங்காத இடத்து' என்று பொருள் காணின், எவை குணமில என்பதற்கு இக்குறளில் எழுவாய் இன்றிப்போம். 'குணமில' என்பதற்குத் தலை எழுவாயாக அமைத்திருத்தல் நோக்கத்தகும்.வணங்குதல் தலையின் தொழில். அதன் எதிர்மறையெச்சத் தொடராய் 'வணங்காத் தலை' என்பதற்கு இயைபு கருதிச் சினைப் பெயராகக் கொள்வதே ஏற்புடைத்து. தாளை வணங்காதவிடத்துக் கோளும் பொறியும் குணமில எனப் பொருள் கோடற்கு 'இன்' பெற்றுக் "கோளிற்' 'பொறியிற்' குணமில எனவரும் குறளின் மூலபாடம் இடந்தராது."

வணங்குதலும் நினைத்தல், வழிபடல் போன்று மன, மொழி, மெய் ஒன்றுபட்ட செயலாகும். இறைவனின் திருவுருவின்முன் வீழ்ந்து வணங்குதலாகிய செய்கையை இப்பாடல் குறிப்பிடுகிறதா? அப்படி என்றால் இது உருவ வழிபாட்டை நினைவூட்டுகிறதா? முதல் வாசிப்பில் இப்பாட்டில் உறுப்பு வணக்கம் சொல்லப்பட்டுள்ளதாகவே கருத வைக்கிறது. கடவுளுக்கு இன்ன உருவம், நிறம் என்றெல்லாம் குறளில் எங்கும் கூறப்படவில்லை. குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று இறைவனை இந்த முறையில் இந்த நேரத்தில் வழிபடு என எந்தக் குறளும் கூறவில்லை. தாள்சேர், அடிசேர் என்று மட்டுமே குறள் சொல்கிறது. இந்த நிலையில் எதனை வணங்குவது? எதன் முன் பணிவது? என்ற வினாக்கள் எழுகின்றன. அகத்தொடு தொடர்பில்லாத பொறிகள் மட்டும் செயல்படும் வழிபாட்டை வள்ளுவர் சொல்லவரவில்லை; தாளை வணங்கும் மனிதனும் வணங்கப்படும் இறைவனும் ஒரு தளத்தில் இல்லை. தலைவணக்கம் முனைப்பின்மையை உணர்த்துவது. எனவே இங்கு உறுப்பு வணக்கம் மற்றும் உருவவழிபாடு சொல்லப்படவில்லை. உருவமில்லாத இறைவனைக் குணவடிவினனாக்கி வழிபடுதல் வேண்டும் என்பது இப்பாடலில் வள்ளுவர் கூறவந்த கருத்து.

இக்குறள் நடையில் காணும் ஒலியின் சிறப்புத்தன்மை பற்றி இ சுந்தரமூர்த்தி கூறுவது: 'இக்குறளில் அமைந்துள்ள 'குணமிலவே' என்றதில் அமைந்துள்ள ஏகாரப்பொருள் இறைவனை வணங்காதிருப்போரிடத்துப் பரிவுணர்ச்சியைத் தோற்றுவிப்பது போல் அமைந்து விளங்குகின்றது என்பர். 'தலை குணம் இலவே' என்றதில் ஏகாரம் இரக்கமும் பரிவும் இசைந்து நின்றது. அந்த ஒலியின் நீர்மையை உள்ளச் செவியால் கூர்மையாய் ஓர்ந்து கொள்க. அரிய பயனை இழந்து அவமே இழிந்து போவது பெரிய இரக்கத்திற்குரியது என்னும் பொருள்கள் எகாரக் குறிப்புப் பெற்றுத் துலங்குவதை எடுத்துக் காட்டுவர்....ஒலியின் நீர்மையை உள்ள உணர்வாலும் மொழியின் நடையியல்பை உணர்ந்து ஓதும் திறத்தாலுமே உணரமுடியும்.'

ஒளியுரை

குறளிசை

குறள் 8 1. இறை வணக்கம் குறள் 10
முகப்பு

குறள் 10

குறள் ௧௦

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

சீர் பிரிக்கப்பட்ட குறள்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

பதவுரை

பிறவி-பிறப்பு
பெரும்-பெரியதாகிய
கடல்-கடல்
நீந்துவர்-நீந்துவார்கள்
நீந்தார்-நீந்தமாட்டார்
இறைவன்-கடவுள்
அடி-தாள்
சேராதார்-இடைவிடாது நினையாதவர்

ஆசிரியருரை

மணக்குடவர்

பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்

காலிங்கர்

பிறவியாகிய பெரிய பௌவத்தினைக் கடந்து முத்தராவர் இறைவனடியைச் சேர்ந்தார்.(பௌவம்-கடல்) மற்று இங்ஙனம் சேராதார் எஞ்ஞான்றும் பிறவிப் பௌவத்தைக் கடத்தல் இலர் என்றவாறு.

பரிமேலழகர்

இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.)

பரிதியார்

பிறவியாகிய சமுத்திரத்தை நீந்துவர் சிவனடி சேர்ந்தார் சிவனடி சேராதவர் பிறவியாகிய சமுத்திரத்தை நீந்தமாட்டார் என்றவாறு.

தேவநேயப் பாவாணர்

இறைவன் அடி (சேர்ந்தார்) - இறைவன் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவர்; பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - பிறவியாகிய பெரியகடலைக் கடப்பர்; சேராதார் நீந்தார் - அப்புணையைச் சேராதவர் அக்கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர்.

வீடுபேறுவரை கணக்கில் கழிநெடுங்காலம் விடாது தொடர்ந்து வருவதாகக் கருதப்படுதலின், பிறவியைப் பெருங்கடல் என்றார். பிறவி வாழ்வு எல்லையில்லாது தொடர்ந்துவரும் துன்பம் மிகுந்த நிலையற்ற சிற்றின்பமேயாதலால், அதனின்று விடுதலைபெற்று நிலையான தூய பேரின்பந்துய்க்கும் பிறவாவாழ்வைப் பெறும்வழியை இக்குறள் கூறுகின்றது.

சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். பிறவியைப் பெருங்கடலாக உருவகித்து இறைவனடியைப் புணையாக உருவகியாதுவிட்டது ஒருமருங்குருவகம். புணை யெனினும் கலம் எனினும் ஒக்கும்.

மு.வரததாசனார்

இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.

இரா சாரங்கபாணி

இறைவனடி வழிபடுபவர் பிறப்பாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர். வழிபடாதவர் அக்கடலை நீந்திக் கடக்கமாட்டார்.

திருக்குறளார் வீ.முனிசாமி

இறைவன் அடிகள் என்னும் தெப்பத்தை சேர்ந்தவர்கள், பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு சேராதவர்கள் (நினைத்திருக்காதவர்கள்) நீந்த மாட்டார்கள்; அதனுள் அழுந்துவார்கள்.

பேரறிஞர் வ.சுப.மாணிக்கனார்

இறைவன் அடியை நினைந்தவர் பிறவிக் கடலை கடப்பர்; நினையாதவர் கடவார்.

கலைஞர் மு.கருணாநிதி

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

சாலமன் பாப்பையா

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

முனைவர் கோ. பெரியண்ணன்

இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பவர்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள்.

ப. வீரராகவன்

யாருக்குப் பிறவி இல்லை?
இறைவனின் தாள் செர்ந்தார்க்குப் பிறவி இல்லை.

உத்தம புத்திரர்

இப்பிறவி வாழ்க்கை என்பது பெருங்கடலைப் போன்றது. இறைவனைச் சார்ந்து அவன் பாதாரவிந்தங்களை ஒழுகுபவர்களால் மட்டுமே அக்கடலைக் கடக்க இயலும். இறைவனைச் சாராதோரால் அக்கடலைக் கடக்க இயலாது மூழ்கிவிடுவர்.

பிறவிக்கும் வாழ்வுக்கும் குறிக்கோள் இருக்கிறது. அதாவது உலக இன்ப, துன்பங்களை மட்டும் அனுபவித்துவிட்டு மறைவதல்ல வாழ்க்கை. அதன் நோக்கம் மீண்டும் பிறக்கும் சுழற்சியைக் கட்டறுத்து முக்தி பெற்று அதாவது வீடு பேறு பெறுவதாகும். அது ஒரு கடலைக் கடப்பதற்குச் சமம். அதற்குக் கடவுளின் பால் சேர்ந்து ஒழுகுவது மாத்திரமே கடப்பதற்கான கலத்தையும், உபாயத்தையும், தேவையான சக்தியையும் கொடுக்கும். அன்றில் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டு, இவ்வுலகத் துன்பத்தில் உழல வேண்டும் என்பது உட்கருத்து.

நம் வாழ்வின் முக்கிய நோக்கம், இந்த வாழ்வைக் காட்டிலும் மேன்மையான நிலையை அடைவதே ஆகும். பள்ளியில் கல்வி கற்கும்போது நோக்கம் அந்த வகுப்பினைப் படித்துத் தேறி, அடுத்த வகுப்பிற்கு, நிலைக்குச் செல்வதே. அதைப் போன்றதே வாழ்வும். மனது எனும் ஆத்மாவைக் கொண்டு ஆக்கபட்டுள்ள இந்த மனித வாழ்வின் முடிவு, பரமாத்மாவைச் சென்றடைவதாக இருக்க வேண்டும். அதற்கு இறைவனையே சிந்தித்து ஒழுகி இந்த வாழ்வெனும் கடலை நீந்திக் கடக்க வேண்டும். மீண்டும் அதே வகுப்பில் வெற்றி பெறாத, தேறாத மாணவராக அல்லாது, இதே வாழ்க்கையை மீண்டும் பிறந்து உழலாமல் மனிதன் இந்த வாழ்வில் தேர்ச்சி பெற்று, முக்தி பெற்று வீடு பெற வேண்டும்.

எனவே பிறப்பறுக்கும் மருந்தாகிய இறைவனைப் பற்றி ஒழுகி மேம்படுவோமாக.

கணிஞன்

இறைவனைச் சார்ந்து நிற்பதால் மட்டுமே நாம் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க முடியும் என்னும் குறள்.

கடவுளது அருள் இல்லாவிடில் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க முடியாது என்பது இக்குறள் கூறும் கருத்து. பிறவிப் பெருங்கடல் என்றால் என்ன? பிறவிப் பெருங்கடலை நீந்துவர் யார்?

பெரும்பான்மையான விளக்கங்கள் பிறவி என்ற சொல்லுக்கு மறுபிறவி/பல்பிறவி என்று பொருள் கொண்டன. எனவே 'இக்குறளில், பிறவி விடுதலை சுட்டப்படுகிறது; மீண்டும் மீண்டும் பிறந்து பிறவித்துன்பங்களில் சுழலாது வீடு-விடுதலை பெறுதலை அதாவது பிறவாவாழ்வைப் பெறும்வழியை இது குறிக்கிறது; வீடுபேறுவரை கணக்கில் கழிநெடுங்காலம் விடாது தொடர்ந்து வருவதாகக் கருதப்படுதலின், பிறவி பெருங்கடல் எனப்பட்டது; பிறந்து இறக்கும் வினை சுழற்சியாகிய இந்தப் பெருங்கடலினை, இறைப்பொருளின் அடிகளைச் சேர்ந்தவரே கடக்கமுடியும்; மற்றவர்களால் முடியாது' என்ற வகையில் அமைந்தன.

பிறவிப் பெருங்கடலை நீந்தார் யார்? என்ற வினாவிற்கு 'இறைவனடி சேராதார்' என்பது நேரடி விடையாக இப்பாட்டில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் 'பிறவிப் பெருங்கடலை நீந்துவர் யார்? என்றதற்கு வெளிப்படையாக ஒன்றும் இல்லை. இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்தாரெனில் இறைவனடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடலை நீந்துவர் என்பது சொல்லாமலே விளங்கும் என்பர். 'சேர்ந்தார்' என்னும் சொல் பாடலில் இல்லை. 'சேர்ந்தார் என்பது சொல்லெச்சம்' என்றொரு குறிப்பு பரிமேலழகர் உரையில் காணப்படுகிறது. சொல்லெச்சம் செய்யுளில் ஒரு சொல்லுக்கு முன்னோ பின்னோ ஒரு சொல் மட்டும் குறைந்து வருவது. 'சேர்ந்தார்' என்னும் ஒரு சொல் வருவிக்க வேண்டியிருத்தலின், அது சொல்லெச்சம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. 'சேர்ந்தார்' எனும் சொல்லை வருவித்துக் கொள்ளும் முறையிலேயே பாட்டின் மற்றச் சொற்கள் அமைந்துள்ளன. அ கு ஆதித்தர் 'சேர்ந்தார்' என்ற சொல் குறட்பாவில் இல்லாமையால் தனித்தொடராக வைத்துப் பொருள் கூறுதல் பொருந்தாது என மறுத்து இறைவனடி சேராதார் பிறவிக்கடலை நீந்துவரோ? நீந்தார் எனக் கொள்ளலாம் என்றார். நீந்துவர் என்பது ஒலிக்குறிப்பால் இப்பொருள் உணர்த்தியதாகக் கொள்வார். இறைவனடி சேராது ஆர் (ஆர்-யார் என்பதன் மரூஉ) பிறவிக்கடலை நீந்துவர்? (எவரும்) நீந்தார்'என்று கொண்டும் பொருள் கூறும் உரை உள்ளது. ஆனால் சேராதார் என்ற தோன்றா எழுவாயை வருவித்து முடித்தல் இலக்கணமரபு ஆதலால் அது இழுக்கு அன்று; எனவே இவ்வுரைகள் மிகையானவை என தமிழ் அறிஞர்கள் அவற்றை ஏற்பதில்லை.

சமயம் சார்ந்த நம்பிக்கைகளைப் பரிந்துரைப்பவர் அல்லர் வள்ளுவர். எனவே பல்பிறப்பு இங்கு சொல்லப்படவில்லை. குறளாசிரியர் மறுபிறப்பு உள்ளதாக ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்தவராதலால் அதற்கேற்ப மறுபிறவி பற்றிக் கூறுகிறார் என்பதும் ஏற்புடைய கருத்தல்ல. இரா சாரங்கபாணி 'பிறப்பு என்னும் சொல் இருவினைக் கீடாக உயிர் எடுக்கும் பல பிறப்புக்களைக் குறிப்பதன்று. மறுபிறப்பு என்பது சமயக் கொள்கை' என்று கூறுவார். மேலும் அவர் பிறவி என்ற சொல் வாழ்க்கை (கு.10, 357,972), இப்பிறப்பில்(கு.1315), தலைமுறை(கு.62,107), குடி(கு.133), மக்கட்பிறப்பு(கு.134), தோற்றம்(கு.345,349), துன்பம் (கு.351) ஆகிய வேறுவேறு பொருள் கொள்ளுமபடி பல குறட்பாக்களில் ஆளப்பட்டுள்ளது என்றார். இக்குறளில் பிறவி என்ப்ற சொல் வாழ்க்கை என்ற பொருளில் வந்துள்ளது என்று கொள்ளவேண்டும்.

அடிசேர்ந்தார் என்ற குறிப்பு இங்கு உள்ளது என்று சொல்லப்பட்டது. இது தொடர்பான தண்டபாணி தேசிகர் உரை இங்கு நினைக்கத்தக்கது: 'இவ்வதிகாரத்து (கடவுள் வாழ்தது), 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்'. இவ்விளக்கம் வள்ளுவர் தம் நூலில் சமயம் புகுந்துவிடக்கூடாது என்பதில் எவ்வாறு கருத்தூன்றி இருந்தார் என்பதையும் தெளிய வைக்கிறது.

கடவுள் உண்டு என்று அதிகாரத்தைத் தொடங்கிய வள்ளுவர் அதிகாரத்தை முடிக்கும்போது 'அவன் துணையல்லாத வேறு எதனாலும் வாழ்வை நீந்த முடியாது' என்கிறார். பிறப்பு, இறப்புக்கு இடைப்பட்ட காலத்தில் உள்ள உயிர் வாழ்க்கையை வள்ளுவர் பிறவி என்கிறார். பிறப்பு-வாழ்க்கை-இறப்பு என்பதையே பெருங்கடல் என்று அவர் இக்குறளில் குறிக்கிறார். 'போராட்டமாக எதிர்நீச்சலிட வேண்டிய உலகவாழ்க்கை என்னும் பெரும் கடலை இறைவழிபாடு என்ற தெப்பம் துணை கொண்டு நீந்துதல்' அல்லது 'வாழ்வு என்னும் கடலைக் கடந்து கரை சேர்தல்' என்ற விளக்கங்களே சிறந்தவையாகும். வாழ்க்கை ஒரு கடல் என்றால் அதில் பயணம் செய்வதற்கு ஒரு மிதவை வேண்டும். அந்த மிதவை இறைவனடி. இறைச்சிந்தனைக் கொண்டோர்க்கு மனவுறுதியும், அதனால் கடந்துவிடலாம் என்னும் நம்பிக்கையும் உண்டாகுமாதாலால், அவர்களால் அதைக் கடப்பது எளிதாகிறது. அவ்வடிகளை நினைந்து கடமையைச் செய்தால் வாழ்வு எளிதாகும். மற்றவர்களுக்கு அது முடிவில்லாததும், கரையே இல்லாததைப் போன்ற தோற்ற மாயத்தையும், அயர்வையும் உண்டாக்குவதால் அவர்கள் வாழ்வு என்ற பெருங்கடலைக் கடக்கமாட்டாதவர்களாகின்றனர். எனவே இறைவனை நாளும் நினைந்து அவனடி போற்றி வாழவேண்டும் என்பது இப்பாடலின் நுண்பொருள்.

கடவுளை நினைப்பவர் பிறப்பாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர். நினையாதவர் வாழ்க்கை என்ற அக்கடலை நீந்திக் கடக்கமாட்டாதவாரவர் என்பது கருத்து.

ஒளியுரை

குறளிசை

குறள் 9 1. இறை வணக்கம் குறள் 11